Sunday, January 13

அழகு நிலா வாழ்க!

அழகு நிலா வாழ்க! – நெஞ்சை
அள்ளும் நிலா வாழ்க!

இளமை என்ற ஒளியி னால்என்
இதயம் வென்ற பருவ மங்கை
பழகு கின்ற பொழுது தந்த
பழர சத்தின் குளிர்மை மிஞ்ச –

அழகுநிலா வாழ்க! – நெஞ்சை
அள்ளும் நிலா வாழ்க

எழில் மயிலே ஆடு! – தோகை
இள மயிலே ஆடு!

தோகை யென்ற திரையின் மீது
தொக்கு வைத்து மரக தத்தை,
வாகை மன்னர் முன்னர் ஆடும்
வனிதை யென்ன அழகு மின்ன –

எழில்மயிலே ஆடு! – தோகை
இளமயிலே ஆடு!

தென்றலேநீ வீசு; சோலைத்
தென்றலேநீ வீசு!

ஊடி நின்ற கணிகை மாதர்
ஒப்ப நின்ற பூக்கு லத்தைக்
கூடி வந்து காதல் வாழ்வு
குலவு கின்ற உலகில் நின்று –

தென்றலேநீ வீசு! – சோலைத்
தென்றலேநீ வீசு!

மாங்குயிலே பாடு! – தளிராம்
மதுவையுண்டு பாடு!

மழலை மைந்தர் குழலை யாழை
மலரின் வண்டின் இனிய ஓசைக்
கழக மாகும் குரலினால்என்
கவிதை நெஞ்சம் உருகி வார –

மாங்குயிலே பாடு! – தளிராம்
மதுவை யுண்டு பாடு!

-நீலாவணன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home