Friday, July 25

ஆட்டுக்கார முடச்சிறுவன்

மூத்தப்பா செத்துப் போனார்
மூதேவிச் சனியன் ... இன்று
பார்த்துத்தான் சாக
இந்தப் பழம் கிழம் கிடந்தாராக்கும்
ஆத்திரம்! அவரைப்பார்க்க
அடங்குவ தாக இல்லை!
மூத்தப்பா செத்துப் போனார்
மூதேவி சாகட் டும்மே!

பின்னேரம் மணி மூன்றுக்குப்
பிள்ளைகள் ஐயா வீட்டுத்
திண்ணையில் திரண்டு நிற்பார் !
தெருவிலே காரும் நிற்கும்.
கண்ணகி.. கொல்லன்..
காவற்காரன்கள்.. பாண்டி மன்னன்..
இன்னும் கோ வலன்.. ராசாத்தி
எல்லோரும் ஏறிக் கொள்வார்!

இந்நேரம் காரில் சென்று
இறங்குவார் துறையில். தோணி
தண்ணீரில் மிதக்கும். வெள்ளைத்
தாமரைப் பூக்கள் வெள்ளிக்
கிண்ணம்போல் கிடக்கும்! கானான்
கிளைகளும், தாரா, கொக்கும்
என்னென்ன விதமாய் நிற்கும்
இதற்குமேல் வயல்கள்.. கோயில்..!

தோணியில் ஏறி அந்தத்
துறையினைக் கடப்பார்.. எங்கள்
மாணவர் மகிழ்ச்சி யாக..
மடத்தினில் தங்கு வார்கள்
பூணுவார் தம்தம் வேடம்
புனைந்திடு வார் எம் ஐயா
காணுவார் சபையோர்! ..கண்ணீர்..
கரகோசம் காண லாகும்!

இடையனாய் ஓடி வந்து
இரண்டொரு வசனம் பேசி
முடவனும் நடித்தேன் ஊரார்
முழுப்பேரும் சிரித்தார் கண்டு!
இடையிலே மூத்தப்பா தான்
இப்படிச் செய்து போட்டார்
இடையனாய் என்னைப் போல
இதயன்தான் நடிப்பான்..இன்று!

மூத்தப்பா.. என்னைத் தூக்கி
முட்டாசு வாங்கித் தந்து
காற்சட்டை புத்தகங்கள்
காசுகள் பிறவுந் தந்து
கூத்தாடச் செலவும் தந்தார்
கோவலன் போலச் செத்து
வார்த்தையில் லாமல் சும்மா
வளர்த்தி வைத் திருக் கிறார்கள்
மூத்தப்பா.. மூத்தப்பா.. உன்
மூச்செங்கே.. மூத்தப் பாவே!

ஆடுகள் பார்க்க வேறு
ஆளில்லை. அம்மா.. பாவம்
ஆடுகள் விற்றுத் தானே
அடுப்பினை எரித்தோம் அந்த
ஆடுகள்.. போனால்.. நாங்கள்
அதோகதி! அதற்காள் நான்தான்
நாடகம்.. படிப்பு.. எல்லாம்
நமக்கினி எதற்கு?.. வேண்டாம்!.


-நீலாவணன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home