Friday, July 25

ஆட்டுக்குடல் ராமசாமி அண்ணர்

ஆட்டுக்குடல் ராமசாமி அண்ணை,
உங்களிடம்
மாட்டுப்பட் டன்றைக்கு
மானக் குறைவுபட்ட
மாஸ்டர் எழுதும்
மரியாதை யான மடல்

வாஸ்தவந்தான் முன்னாள்
'வசு' வோட்டிக் கொண்டிருந்தீர்!
ஆனையிறவு வவுனியாப் பாதையிலே
ஆனையைக் கண்டு அடித்த 'பிறேக்'காலே
உங்கள் குடல் தெறித்துப்
போன கதையினை யாம்
ஓராயிரம் முறைகள்
உம் வாயால் நீர் பாடக்
கேட்டதுண்டு ! நன்றாய்க்
கிளிபோலப் பேசுகிறீர்!
ஆட்டுக்குடல் பொருத்தி,
அக்கதையை அச்சடித்து
பாடி வசுவில்
பணம்பண்ணிக் கொள்ளுகிறீர்!

பாடுபட்டு நாலு
பணத்தை உழைத்தெடுத்தால்..
சீனிதொட்டு மற்றுமுள்ள
தீன்பண்டம் அத்தனையும்
ஆனை விலை! தேடி
அகப்படுவதாவில்லை!
எங்கள் மனிதக் குடல்கள் .. இதையறியா!
சங்கடங்கள் ஒன்றிரண்டா?
சாற்றித் தொலையாதே!
எவ்வளவோ உண்டு
இலை குழைகள் நம்நாட்டில்.
அவ்வளவும் மேய்ந்தாலும்..
ஆரும்மைக் கேட்பதண்ணே!

சோறு செமிக்காதெனச் சொல்வீர்!
உம் வாயில்..
நாறுகின்ற கல்லோயா
நற் கருப்பஞ் சாறு மட்டும்..
சீரணமாகிச் சிறு நீராய்ப் போகிறது!
காரணம்
உம்வயிற்றின் உள்ளிருக்கும்
ஆட்டின் குடலில்
கரும்பின் குழைகள் செமித்து
நடைமுறைக்கு வந்திருக்க லாம்
நாம் அறியோம்.
குடலை விளம்பரம் பண்ணி -
குமர் குடும்பம்
என்று பணம்பண்ணி
ஈஸ்டன் பார் உட்புகுந்து
நின்றுங்கள்
ஆட்டுக் குடல் நிமிர
ஊற்றுவதைக்கண்டுவிட்டுத்தான் அன்று
காசு தரவிலையோஎன்று நினையாதீர்.
இல்லையண்ணே .

சிக்கனமாய்திட்டமிட்டுக்
காசைச் செலவு செய்து 'பஸ்'
கூலிமட்டோடும் நின்றிருந்த
மாசக் கடை நாளில் கேட்டீர்.
"பல நாட்கள்
போட்டேன் போய் வாரு"மென்றால் ..
பாட்டைத் தொடங்கிவிட்டீர்!
பாவமென்ன செய்தேனோ?
என்னுடைய அந்தஸ்தை
ஈரமற்ற நெங்சகத்தை
கிண்டல் செய் தீர்பலபேர் கேட்க!
"மனிதன்நிலையற்ற வாழ்வுடையன்!
நீர் செய்யும்
புண்யம்தலைகாக்கும்! "என்று
தருமோப தேசமும்செய்தீர்!
அப்போதில் சிலையாக நான் கோணிக்
கையைப் பிசைந்தேன்!
கடுகதியைக் காணேனே!

காலிரண்டும் இல்லாமல்
கல்லொன்றில் வீற்றிருந்து
தோல் நீக்கி முந்திரிகைக்
கொட்டை விற்கும் தொந்தியண்ணன்
கூப்பிட்டுன் வாயிலிரு
கொட்டைகளை வைத்ததனால்
காப்பாற்றப் பட்டேன்!
ஓர் கை சொத்தி கந்தையா
"தோழே வா!" என்றும்மைக்
கூப்பிட்டுத் தோலுரிந்த
வாழைப் பழம்வைத்தும்
வாய்மூடச் செய்கையிலே..
வந்து தொலைத்ததண்ணே 'வஸ்'.


- நீலாவணன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home