Friday, July 25

என்பதற்காய் எழுதுகிறேன்

சினிமாவின் விளம்பரங்கள்
செறிந்திலங்கும் ஒரு சிறிய மூலைக்குள்ளே…
எனையுமொரு பொருட்டாக்கி,
இடம்பிடித்துக் கொண்டிருக்கும் புதிய செய்தி!
தனது 'சுவீப்' நம்பர்களும் கிடப்பனவோ..?
என அரவு புள்ளியாக
தினசரிகள் தினம் படிக்கும்
குருக்களையா கண்களுக்கும் தெரியும் செய்தி!

'சலூன்' கடையில் இருந்ததனைச்
சத்தமிட்டும் வாசிப்பார்! சலிப்பார்!
"ஆளை, விளங்கிறதோ?
நம்முடைய
விசர்ச் சின்னத்துரை மாஸ்டர் பற்றி,
இந்த இலங்கை சிலோன் புகழ்பெற்ற
பேப்பரிலே எழுதியுள்ளார் செய்தி!
பாவம்
எலும்பாக இதுவழியே திரிந்தாலும்…
ஆள் பெரிய எழுத்தா ளன் ஓய்!"

என்றுசொல்வார்;
அதைக்கேட்ட
எங்களூர் இளந்தாரி மார்கள் சேர்ந்து
ஒன்றுபட்டும் இரங்குதற்காய்
ஒரு புதிய பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்து,
"கண்டுவிட்டுப் போகாமல்..
கண்மூடிவிட்டானே மடையன்"என்று
ஒன்று விடா தென் படைப்பின் மேட்டிமைகள்
ஒவ்வொன்றாய் உரைப்பார்! உண்மை!

என்பதற்காய் எழுதுகிறேன்!
இதைவிட ஓர் கவிஞனுக்கு
என்ன வேண்டும்?
கண்டிதனைப் பொறுக்காது..
கயிலையிலே சிவனாரை மனைவியோடு
கண்ட ஒரு தாழம்பூக் கதையாக..
கலை ஆழிக் கரை கண்டார்போல்..
பண்டிதர்கள் பகர்வதெல்லாம்
காழ்ப்பு! அவர்தம்
கட்சி மனப்பான்மை காணும்!

-நீலாவணன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home