ஓவியம் ஒன்று!
என்னடியைத் தொட்டெடுத்தான்
தன்மடியில் இணைத்தான்
இரவெல்லாம் விழிமழையின்
அருவியினிலே நனைந்தான்!
கன்னமலர் கொண்டொற்றி
ஈரமெல்லாம் துடைத்தான்
கனவின் இழை தனில்நினைவின்
சரமொன்று தொடுத்தான்!
தன்னிதழால் ஏந்தியதைச்
சூடிஇடை பறித்தான்
தமிழ்க்கவியில் பிழிந்தெடுத்த
சுவைத்துளிகள் தெளித்தான்
என்னசுகம் மெய்ம்மறந்தேன்
என்றாலும் மறுத்தேன்
இரவுகுழல் நரைத்ததை
இருவருமே வெறுத்தோம்!
வானஅரை வட்டத்து
மையத்தின் முகட்டில்
வயங்குமதிக் கலசத்தில்
மதுரமதுத் தளும்பும்
மானமிழந்தான், மிகவும்
மாந்தியதில் புதைந்தான்!
மயங்கி, இசை நரம்புகளை
வருடிஎனைத் ததைந்தான்!
கானநதிச் சங்கமத்தில்
மீனெனவே குறித்தான்
கரங்களிலே அலையள்ளிப்
பெருந்தாகம் தணித்தான்!
நாணமெனும் செந்திரைக்குள்
நானொளிந்தேன்! விழித்தால்...
நாளொன்று புலர்ந்ததடி
நாமதனைச் சபித்தோம்!
சிப்பியொன்றைச் சிமிழாக்கி
முத்துகளை அரைத்தான்
சிவப்புவண்ணக் குழம்புசெய்தான்
தூரிகையைத் துவைத்தான்!
அப்பியப்பி அழித்தழித்து
அழுந்தஅதைப் பதித்தான்!
‘அருமையிது’ எனஅவனே
தனையிழந்து ரசித்தான்!
எப்படியான் இனியும் எனை
ஒளித்தல்தகும்? இசைந்தேன்!
இயன்றவரை உதவிபல
புரிந்தவனைப் புகழ்ந்தேன்!
அப்பொழுதும் புலர்ந்ததடி
நாமதனைத் துதித்தோம்
அவன்படைத்த ஓவியத்தை
நயந்துமிகக் களித்தோம்!
2 Comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home