Sunday, July 27

பீற்றல் பெருமை

தங்கச்சி உன்னைத்
தயவாகக் கேட்கின்றேன்
எங்களையும் பார்க்க
எதிலே பெரியவள் நீ?
பீற்றற் பெருமை பிடித்து நடிக்கின்றாய்
ஊற்றையினைக் கண்டவள் போல்
உன்முகத்தை ஏன் சுழித்தாய்?

சட்டையின்றி நான்வயலில்
சம்பாதித்த பணத்தில்
பட்டணத்தே நீ போய் படித்தபடியாலா?
செல்லம்மா என்ற பெயர்
செப்பமில்லை என்று சொல்லி
செல்வி நீ பின்னால் செயஸ்ரீ ஆனதிலா?
எங்களையும் பார்க்க
எதிலே பெரியவள் நீ?

ஐந்தாம் முறையும்
பரீட்சையிலே முட்டையிட்டு
கந்தையா மச்சானைக்
காதலித்துக் கார் பிடித்துக்
காணாமல் போயெங்கோ
கலியாணம் செய்ததிலா?
பூணாரம் ஒவ்வொன்றாய்ப்
போனபின்னர் ஓடிவந்து,
ஊரில் முதுசொம்
வயல்விற்றுக் கொண்டு
'படான்'
கார் வாங்கி மார்ட்டின்
'கராச்'சிலே போட்டதிலா?
'போர்ட்' பலகை மாட்டி
முதலின்றியே பொருளை
ஈட்டுகின்ற வர்த்தகரின்
இல்லாள் நீ என்பதிலா?
எங்களையும் பார்க்க
எதிலே பெரியவள் நீ?

உன்வீடு மாடி.
குளியலறை கக்கூசும்
மின்சாரத்தோடு மிளிர்வதுவே!
ராசாக்கள்
சிம்மாசனம்போல்
விலையுயர்ந்த ஆசனங்கள்!
அம்மோய்! உன் 'அல்சேஷன்'
நாய்கள், குதிரைகளே!
வாடகை வீட்டின்
வசதிகளைக் கண்டதனால்
'மேடம்' நீ ஆகிவிட்ட
மேம்பாடு மேட்டிமையோ?
ஆடலும் பாடல் அரங்கும்,
அலங்காரச்
சோடனையும் பார்த்தவரைச்
சொக்கவைக்கும்!
ஆனாலும்
எங்களையும் பார்க்க
எதிலே பெரியவள் நீ?

கல்யாணமாம் உனது
காதல் புதல்விக்கு!
எல்லாம் பெரிய
தடபுடலாம்! எங்களுக்குச்
சொல்லவில்லை ஆனாலும்
சொந்தமென்று என்மனைவி
நல்லம்மா-உன்போல
நாகரிகம் இல்லை!
'மினி' அணியத் தெரியாத
காட்டு மிராண்டி!
எனக்குமந்த
'லோங்கிசு'கள் ஏதும் கிடையாது!
எருமைத் தயிரோடு
எங்கள் வயலின்
அரிசி, மரக்கறிகள்,
வாழைக்காய்,
எண்ணெய்ப் பணியாரம்
கொண்டு வந்தோம்.
கல்யாணச் சங்கை அணியாய்!
எத்தனையோ கார்களிலே
வந்த துரைமார்கள்
துரைச்சாணி மார்களெமைக்
கண்டு ஒரு விதமாய்ப்
பார்த்த
உதாசீனப்பார்வைக்கு..
உன்கணவர்.. அந்த
உயர்ந்த மனிதரிடம்
சொன்ன பதிலைச்
சுவரோரம் நான் கேட்டேன்!

"வெள்ளாமைக் காரனெங்கள் வேலன்!
இவள் பெண்டாட்டி நல்லம்மா!
என்றான்"
நாம்
நாகரிகம் இல்லாதோர்!
உண்மையே! நாங்கள்
உழைப்போர்.
உடுத்திருக்கும்
சின்ன உடை சொந்தச்
செலவிலே வாங்கியது!
எங்கள் களி மண்குடிசை..
வளவினுள்ளே
தெங்கு, பலா, கமுகு,
தேன்கதலி, மாங்காயும்,
எங்கள் உழைப்பே!
எம்வீட்டு நாய் எளிய
எங்களூர்ச் சாதி!
இறைச்சியொன்றும் தேவையில்லை!
ஏதும் இரவல்
பொருட்களிலை எங்களிடம்!
ஏது பிள்ளே! பட்டணத்தில்
எல்லாம் இரவலிலே
சீவிக்கும் நீங்களோ
கீர்த்தியுடையவர்கள்?

(முடிக்கப்படவில்லை)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home