Tuesday, November 15

நீலாவணன் நினைவாக - எம் ஏ.நுஹ்மான்

நீலாவணன் நினைவாக

உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண் விடுக்காத பூனைக் குட்டிபோல்
உலகம் அறியா ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்.

நீ உன் கவிதை மாளிகை வாசலை
எனது கண் எதிர் திறந்து காட்டினாய்
நீலாவணையின் கடற்கரை மணலில்
நீ உன் கவிதை வீணையை மீட்டினாய்...

ஓ, என் கவிஞனே,
உனது கவிதை மாளிகை வாசலும்
உனது கவிதை வீணையின் நாதமும்
எனது நெஞ்சினை அதிர வைத்தன.
எனது நெஞ்சின் எங்கோ மூலையில்
மூடுண்டிருந்தத கவிதையின் ஊற்று
அந்த அதிர்வினால் திறந்து கொண்டது.
உனது இசையில், என் கவிதையின் ஆன்மா
உயிர்பெற் றெழுந்தது.

ஓ, என் கவிஞனே,
நீயே என்னைக் கவிஞனும் ஆக்கினாய்
நீயே என்னை உயிர்பெறச் செய்தாய்
உன்கவி வனத்தில்
இந்த இளங்குயில்
நீண்ட காலமாய்ப் பாடித்திரிந்தது.

காலம் நமது கவிதை வானிலே
இருண்ட முகில்களைக் கொண்டுவந்தது
காலம் நமது உறவின் பரிதியை
இருண்ட முகில்களால் மூடி மறைத்தது.

ஓ, என் கவிஞனே,
நமது உறவின் பரிதியை மறைத்த
கருமுகில் கும்பலைச் சிதறி அடிக்க
நீ ஏன் உனது சூறாவளியினை
அனுப்பவே இல்லை.
நீயோ உனது சூறாவளியினை
அனுப்பவே இல்லையே.

நமது பாதை பிரிந்தது தோழா
நானோ புதிய செஞ்சூரியனின்
திசையினை நோக்கிப் பயணம் தொடங்கினேன்
நீயும்ஒருநாள் என்னுடன் அந்தத்
திசையினில் வருவாய் என்றும் நம்பினேன்.

ஆ! என் கவிஞனே,
அனைத்தும் முடிந்தது.
நீயோ உனது நெடும் பயணத்தை
எதிர்பாராத வகையிலே இன்று
முடித்துக் கொண்டதாய் தந்தி கிடைத்தது.
துடித்துக் கொண்டதென் நெஞ்சு.

தொலைவிலே, நீலாவணையின்
கடற்கரைக் காற்றில்
ஓயாத உன்கவிதை
ஒலிப்பதனைக் கேட்பேன் நான்.
'மண்ணிடை இரவுக்
கன்னியின் ஆட்சி
இன்னும் தேயவில்லை இளம்
தென்னையின் ஓலைகள்
பண்ணிய இன்பப்
பாட்டுகள் ஓயவில்லை...'

ஓயாத உன்இதயம் ஓய்ந்ததுவாம்
ஆனாலும்
ஓயாத உன்கவிதை
ஒலிப்பதினைக் கேட்பேன் நான்.

உனது சடலம் சிதையிலே எரிவதை
அன்றேல் அதுஓர் குழியுள் புதைவதைக்
காண்பதற்காக நான் வரவில்லை...
இதுவே உனக்குஎன் இறுதி அஞ்சலி.

எனது துயரையும், பெருமூச்சினையும்
உனது நினைவின் சமாதியின் மீது
சமர்ப்பணம் செய்கிறேன்
சாந்திகொள் அன்பனே!

12-01-1975