Monday, July 28

கவிஞர் நீலாவணன் தொடர்பான மேலதிக வாசிப்புகளுக்கு....

கவிஞர் நீலாவணன் படைத்து வெளிவந்துள்ள 'ஒட்டுறவு'- சிறுகதைகள்,'ஒத்திகை' - கவிதைத்தொகுதி,'வேளாண்மை'- காவியம் என்பவற்றை வாசிக்க வலதுபுறம் உள்ள தொடுப்புகள் மீது சொடுக்குக

(நன்றி: நூலகம்)

ஒளிவெள்ளப் பாய்ச்சலிலே

நெய்க்கலசம் நிறைந்திருக்கு
இதயவிளக் கணையாது!
ஒளிவெள்ளப் பாய்ச்சலிலே
இருளே நீ… சிறுதுரும்பு!
கல்லாலே..கொலை நடத்தி
வேடர் நிணம் புசித்தார்.
நாகரிகர் நாங்கள்
கலைக்கோயில் கட்டுகிறோம்!
வேடரா நாமோ உயர்சாதி என்பதனை
நீயா… விளம்புவது?
ஐயை…யே! என்ன அசிங்கம்!
இளம்பிறையைத் தொடர்ந்துவரும்
இருத்தையமா வாசை இருள்!
வளர்பிறையே… முழுநிலவு!
ஒளிவெள்ளப் பாய்ச்சலிலே….
இருளே நீ சிறுதுரும்பு!

எழுதியது:17.01.1965

விடுப்பு

"வள்ளி யக்கை! வாகா,
வந்திப் படியுட்கார்
வட்டா வுக்குள் வெற்றிலை
கொண்டு வைபிள்ளை
பிள்ளை குட்டிகள் சுகமா?
கோப்பி வருமிப்போ
பின்னால் போடு வாய்க்கு,
பிறகு… புதினங்கள்?"
கள்ளப் பொன்னன் பொண்டிலை,
யாரோ கரவோடு
கதவில் வந்து தட்டிய தாகக்
கதை கேள்வி!
"வள்ளி யக்கையின் வாய்ச்சொல்
போலவை வாய்க்காதாம்!
வந்தது யாராம்? கண்டது யாராம்?
வடிவாய்ச் சொல்"

"காலம் கெட்டுப் போச்சிடி பிள்ளை…
கதிராமன்!
கணபதி யண்ணன் மகனை
உனக்குத் தெரியாதா?
காலை* யிருந்து
வீடு வரக்குட் கண்டானாம்
“கண்ணகை” கதவை திற
நான் பொன்னன் என்றானாம்
வேலைகிடக்குப் பிள்ளை
எனக்கு, வேறென்ன…?
விடியச் சாமம் தொட்டிது
மட்டும் ஒழிவில்லை.
சேலைக் கெத்தனை ரூவாய்
பெட்டை செலவாச்சு?
சிகப்புக் கரையும் முகப்பும்
நல்ல செப்ப மிது!
செத்தால், இந்த சீர்சிறை யெல்லாம்
யார்கண்டார்.
சீவன் போக முன்னர்
இதெல்லாம் செய்யாமல்.
வைத்தார், கொண்டா போய்விட் டார்
நான் வரவா போய்
வட்டிக் காசும்
முப்பது ரூவாய் வரவேணும்…."

"அத்தா னுக்குச்
சம்பளமின்னும் விழவில்லை?"

"அவசர மில்லை செலவு கிடக்கும்,
அறிவேன் நான்
குற்றம் இல்லை
வருகிற மாதம் தந்தாலும்.
கோழி, நெல்லுப் பாயில்!
அதனை ‘சூய்’ எண்ணு. "

"கோழி யிறைச்சிக்
குழம்புமிருக்குத் தயிரோடும்
கொஞ்சஞ் சோறு தின்னேன் அக்கை."

"வேணாங்கா.
கோழிக் கறியில் கிடந்தால்
எடுத்துக் கோப்பைக்குள்
கொஞ்சம் தந்தால்
பிள்ளைகளுக்குக் கொடுபோவேன்!
ஏழிது மாசம், என்னடி? பிள்ளை..
வயித்துக்குள்
ஏறும், ஊரும்,
இம்முறை ஆணே பெறுவாய் நீ!
நாளு மிருக்கு…
காசு களஞ்சுக் கஞ்சாதே
நல்லது போய்வரு கின்றேன், தங்கம்
நாளைக்கும்!"

(காலை* - தோட்டம்)

நம்மோடு பேசுவோம் நாம்

பொன்னோடு சிலர்பேசுவார்கள் - வெறும்
புகழோடு சிலர் பேசுவார்கள்
மண்ணோடு சிலர் பேசுவார்கள் - நன்
மதியோடு சிலர் பேசுவார்கள்
விண்ணோடும் சிலர் பேசுவார்கள் - தம்
விதியோடும் சிலர் பேசுவார்கள் எனின்
நண்பா
நமக்குள் கிடந்தெந்த நாளும்
நம்மோடு பேசுவோம் நாம்

கலையோடு சிலர் பேசுவார்கள் - சிவ
கதியோடு சிலர் பேசுவார்கள்
நிலைமாறி சிலர் பேசுவார்கள் -மூளை
நினைவற்றும் சிலர் பேசுவார்கள்
சிலையோடும் சிலர் பேசுவார்கள் - சுத்த
சிவமாகிச் சிலர் பேசுவார்கள்
நண்பா
நமக்குள் கிடந்தெந்த நாளும்
நம்மோடு பேசுவோம் நாம்

அரசென்று சிலர் பேசுவார்கள் - நல்
அறமென்று சிலர் பேசுவார்கள்
அறிவென்று சிலர் பேசுவார்கள் - இதோ
அழிவென்று சிலர் பேசுவார்கள்
முறையென்று சிலர் பேசுவார்கள்
பொதியென்று சிலர் பேசுவார்கள்
நண்பா
நமக்குள் கிடந்தெந்த நாளும்
நம்மோடு பேசுவோம் நாம்

சரியான இடம் போகின்றேன்

“எங்கு போ கின்றீர்? என்றீர்
எங்கேனும் போகின்றேன்.
ஏன்
அங்கெலாம் தொடர்ந்து வந்து
அறுக்கவோ கழுத்தை?
ஓம் ஓம்
எங்கேனும் போகின்றேன் ஓய்..
இடத்தை நான் சொல்ல மாட்டேன்…

இங்குபோல் இல்லா வேறோர்
இடத்துக்கே போகின்றேன் நான்
மாதங்கள் மடிதல் இல்லா
மகிழ்வான இடமாய்,
உண்ணத்
தோதான பண்டம் யாவும்
சுத்தமாய்க் கலப்பில் லாமல்
நீதியாய் விற்கும் ஊராய்
நினைவெலாம் ஒன்றே ஆகிச்
சாதனை புரியத் தக்க
சரியான இடம் போகின்றேன்.

ஒரு பந்தும் ஒரு தாயும்

பேசத் தெரியாத, என் பிள்ளை,
நெடுநாளாய்
ஆசையோடு வைத்து
விளை யாடும் அழகான
பந்தோ டிருந்தான் படலைக்குள்,
யாரோ பெண்
குந்தியிருந்தாள் குழந்தை அருகினிலே,
ஆஸ்பத் திரியிருந்து
வந்திருந்தாள் அம்மாது
பேசத் தெரியாத
பிள்ளையெனக் கண்டறிந்தாள்
ஆசையொடு தன்கழுத்தைக்
கட்டி, "அம்மா பந்து" என்று
பேசும் பொற் சித்திரத்தைப்
பெற்றமனம் எண்ணியது.
பந்தொன்று வாங்கப் பணமில்லை!
ஆதலினால்
சந்தர்ப்பம் தன்னைச்
சரியாய்ப் பயன்படுத்திக்
கொண்டாள்!
அவளுடைய
கொங்கைகள் மூன்றாயின!!
கண்ட ஒருவர்
கதைசொல்லும் முன்பே அத்
தாய்மை நடந்து
தலை மறைந்து போயிற்று!
வாய்பேசா என்மைந்தன்,
தாயோ டிவை சொன்னான்.
கண்களில் நீர் சோரக்
கை காட்டி அழுகின்றான்.
கண்துடைத்தேன், பிள்ளைக்கு.
"கள்ளி" என்றாள் என்துனைவி.

ஆசாரந்தெரியாத பூசாரி!

இல்லாத பேயை இருப்பதுவாய்க் கற்பித்து
வெல்லுவேன் அஃதையென விறாப்பு மார்தட்டி
மூன்று விரலால் மேல் முழுதும் திருநீறும்
நீண்டு வளர்ந்த சடாமுடியும் தாடியுமாய்
வண்டியின் சில்லளவு குங்குமப் பொட்டோடு
கண்டோர் மருளுமொரு காட்சி யுடையவனாய்
கையில் உடுக்கும் கசையும், மறுகையில்
சூக்மாந் தடியும் சுடலையிலே சீவியமும்
கக்கத்தில் மண்டை எலும்போடும் சுற்றுகிற
கோணங்கி யாரே! நீர் கூறுவதைக் கேட்டேன்நான்!

ஏனோய் இதெல்லாம் நீர் எங்குகற்றீர் என்றறிவேன்
பிச்சை எடுக்கும் ஒருவன் பிசத்திய
கச்சடா வார்த்தைகளை கண்டவற்றை காதலித்து
கட்டி எடுத்த கலவையினை மந்திரமாய்
வெட்டி விழுத்த விரைகின்றீர்!பூசாரீ!
வயிற்றை கழுவும் வழிகண்டீர்!
வாழ்த்துகிறேன்முயற்சிக்கு!
பச்சரிசி பண்டம் கிடைக்கும் பிழைத்துப்போம்…!
பிச்சை பிசத்தியதைக் காட்டிச்சுளையான
மந்திரமாய் சொல்லிச் சுடலையிலே
இல்லாத பேயை இழுத்துத் துயிலுரியும்
வல்லமையை.. எம்மிடமும் காட்ட நினைப்போ!
அவித்தை ஒரு பேய்தான் அதனிடம் சிக்கி
அவத்தை படும் நீரும்… அந்தோ.. ஒரு பேய்
நான்
பூசாரி என்று புளுகவும் செய்கின்றீர்!
ஆசாரந் தெரியாத பூசாரியே…!
அவித்தைப்பேயோட்டு முன்னர்!
வெறும்பொய் பிசத்தலைக்
காய்வெட்டிப் பின்னர் கழி!

வெல்க

"ஏழாம் ஆள்" என்றாய் மைந்த.
ஏன்விம்மி அழுகின்றாய் போ!
நாளெல்லாம் படித்தாய் - உண்மை
நானுந்தான் கண்டேன், ஓராம்
ஆளாக வருவேன் என்றும்
அம்மாவைப் பார்த்துச் சொன்னாய்.
வேளைதான் சரியா யில்லை
வெட்கமேன்? அழாதே போபோ!

முப்பத்தி யெட்டுப் பேர்கள்
மொத்தமுன் வகுப்பு நண்பர்.
எப்படிப் படித்தார்! ஈற்றில்
என்னவாய் வந்தார். அந்த
முப்பத்தி யெட்டாம் பிள்ளை
மூடனா! அறுவர் போக
முப்பத்தோர் மாணாக்கர்க்குள்
முதல்வன் நீ! ஏழாம் பிள்ளை!

முப்பது பேரைவென்ற
முதலாம் ஆள் நீயே! அந்த
முப்பத்தி யெட்டாம் பிள்ளை
முழுதாக ஆரை வென்றான்!
அப்படி யிருந்தும் அந்த
அவன் என்ன சொன்னான் தம்பி
"அப்பா என் வகுப்பில் நான்தான்
அதிபெரும் புள்ளி" என்றான்.

"எப்படி?" என்றார் அப்பா
"இறுதியாள் வகுப்பில் நான்தான்.
அப்படிப் பார்த்தால் முப்பத்
தெட்டன்றோ இலக்கம் நான்தான்!"
"எப்போதும் புளுகும் பொய்யும்!
எமனே போ" என்றார் அப்பா!
சுப்பையா சினிமாப் பார்க்க
சோக்கோடு கிளம்பிப் போனான்.

அவன்போலப் போகாதே நீ!
ஆறுபேர் தானே இன்னும்.
கவனமாய் முயற்சி செய்தால்
கட்டாயம் வெல்வாய்! ஈங்கோர்
நவஉல கமைக்க உன்னை
நம்பினேன் தென்பு கொள்வாய்!
கவலைகள் விடுக மீண்டும்
கடமையைத் தொடர்க! வெல்க!

விவேகி

துக்கமும் துயரும் பொங்கும்
துவிகுரல் சினிமாப் பாட்டு
பக்கத்து வீட்டுப் பையன்
பலமாகப் பாடல் கேட்டேன்
பக்கத்தில் இருந்து பாடம்
படித்தவள் நளினி 'பாபா'
'பக்'கென நூலை மூடிப்
பார்த்தனள் சுற்றும் முற்றும்!

பாட்டிலே சொக்கிப் போய் தன்
படிப்பையும் துறந்தாள் என்று
காட்டினர் வீட்டிலுள்ளோர்!
கணத்திலே, துடைப்பம் தூக்கி
மூட்டைபோல், கிடந்த நாயின்
முதுகிலே போட்டாள் ஒன்று!
வீட்டினைச் சுற்றி நாயும்
"வீல்" என்று கத்த மீண்டாள்!

ஆதலால்.. நளினி பற்றி
அழகம்மா 'ரீச்சர்', நீங்கள்
வேதனைப் படுதல் வேண்டாம்!
விவேகி என் நளினி, ஏதோ
சாதனைக் குறைவு: நாளை
சரிப்பட்டு விடுவாள்.. ஆண்டுச்
சோதனைக் கெல்லாம் நன்றாய்
விடை செய்வாள்! கவலை வேண்டாம்!

எழுதியது25.09.1965 (மாலை – 7.00 மணி)

நாய்கவனம்

நாய்கள் இரண்டு
இரண்டும் பிறத்தி!
வழிநடைப் பட்ட
வழிசல் பிறவிகள்!
ஒருநாள்…வந்தன வாசலில்,
பொறுக்கத்தான்!
பொறுக்குவது நாய்களுக்குத்
தொழிலானால்…
அதுவே கலையானால்…
பேஷாகப் பொறுக்கட்டும்!
வயிறுகள் வளரும்!
புழக்கடை புனிதமுறும்!
பொறுக்கட்டும்! பொறுக்கட்டும்!
பொறுக்குகையில்…
வீணாக ஒன்றை ஒன்று
வெறுத்து வெரூஉக் கொண்டு
கடிபிடிப் படுவானேன்?
சண்டை பிடிப்பதிலே
நாய்களுக்கு நிறைவானால்
பிடிக்கட்டும்!
நாணமற்று
உடையின்றி நடுத்தெருவில்
ஒன்றாக நிற்கட்டும்!
ஊர்திரண்டு மித்திரனைப்
பார்த்து நகைக்கட்டும்
அதற்காக…
என் வீட்டுக் குழந்தைகளின்
சங்கீத வகுப்புக்கு
இடையூறாய் நிற்பதனை அனுமதியேன்
அடிகல்லே அடிகல்லே
அசிங்கப் பிறவிகளை…

திரும்பி வருவாய்

ஒருநாள் ஞானம் உண்டாகும்
ஊரை நோக்கித் திரும்புகையில்
வருவாய், எனையும் சந்திப்பாய்!
வாழ்த்தி உனை நான் வரவேற்பேன்!
கருவம் அழியக் கண்பெறுவாய்
கைகள் கூப்பிக் கும்பிடுவாய்
அருமை மகனே அந்நாளை
ஆவலோடும் எதிர்பார்ப்பேன்!

ஒளி என்றாய் முன் ஒருபோது
உணர்ச்சி இருட்டென்றாய் பின்
வழியை விட்டு வாய்ச்சொல்லில்
வழுவி எங்கோ விழுகின்றாய்
தெளிவும் பெறுவாய் முடிவினிலே!
திரும்பி வருவாய் வரும்போதுன்
விழிகள் சொரியும் துயர்க் கவிதை
விரும்பி அதனை நுகர்வேன் நான்!

துணிவும் பொறுமையும்;;

நாங்கள் வளர்க்கின்ற
நாய் பெரிய சாதியல்ல.
தாங்கள் வளர்த்த பெட்டை
நாயின் தவங்களை
எங்களின் வேலி
இடுக்கிலும் போட்டுவைத்தார்.
தங்க நிறம் மேனி!
தடித்து முறைத்த செவி!
வாலுமில்லை ஆளை
வளர்ப்போம் என வளர்த்தோம்.
நன்றாகச் சாப்பிட்டார்.
நாளும் வளர்ந்துவந்தார்.

முன்னங்கால் தூக்கி
முகம் நக்க முந்தி நிற்பார்.
அல்ஷேஷன் போல,
அழகான நாயிதென்று
எல்லோரும் சொன்னார்.
இரவில் அதன் சத்தம்,
ஊரைக்கலக்கும்!
உலுத்தும் திருடர்களை.
ஆரையும் இன்னும் கடித்ததில்லை
ஆனாலும்
ஊரார் பயந்தார்
உருவத்தைப் பார்த்தவுடன்.

அந்த நாய் தோட்டத்தில்
ஆடுவந்து மேய்கையில்
சந்தோஷமாக அதைப்
பார்த்துப் படுத்திருக்கும்!
ஆட்டைத் துரத்தி
வெளியில் அனுப்புகையில்
ஓட்டமாய் ஓடி அதை
உள்ளே மறித்து எனை
ஆட்டங்கள் காட்டும்
அதனால் பயிரழியும்.
போட்டால் ஒரு போடு
கால்தூக்கி ஓலமிடும்!
மாட்டைத் துரத்தாது,
பகிரங்கப் பாதையிலே
மோட்டார் துரத்துகின்ற
மூளை கெட்ட நாய் இதென்று,
எம்ஜீஆர் என்று
இதற்குப் பெயர்சூட்டி
எம்மடியார் போற்ற
இதைவைத்துக் கொண்டிருந்தோம்.

எவ்வளவோ உண்டு
இவர்தம் புராணங்கள்.
அவ்வளவுக் குங்களை
ஏன் நான் அறுத்துவைப்பான்.
இன்றுபகல் எங்கள்
மனைவாசல் பக்கமாய்
என்றும் வராத விருந்தார்
வந்திருக்கக் கண்டேன்.
அடி இதென்ன கஷ்டம் மறுகாலும்
கொண்டு வா கம்பென்று கூவினேன்!
வந்தவர்,
தோட்டத்துப் பக்கம்
தொடுத்தார் துவண்ட நடை.
மீட்டும் துரத்த,
விரைவாக ஓடுகின்றார்!
பீர்க்கநெற்றுப்போல எலும்பும்
நெடிதாக
பார்க்கப் பரிதாப மான எலிவாலும்
பாயில் பசியின்
பயங்கரத்தைப் பாலியத்தில்
நேருக்கு நேர்கண்ட நாய்க்குட்டி!
நீர்மையுள்ள
எங்கள் எம்ஜீஆர் அவர்கள்
எங்கிருந்தோ ஓடிவந்தார்.
எங்குவந்தாய் அற்பப்
பொடிப்பயலே என்பார் போல்,
பாய்ந்துபோய் சீறி,
படமெடுத்த வேளையிலே
காய்ந்த குட்டி நாய் திரும்பி
காரமும் சாரமுமாய்
கொம்புதல் கண்டேன்
கோபத்தை விட்டு எங்கள்
எம்ஜீஆர் நின்றார் இளித்து!

விடிகிறது

நீதியைக் கோரும் மரணப் பெரும் அமைதி
நிசியின் முன் கைகட்டி..
நீதியையே வேண்டி நிற்கும்!
வஞ்சகப் பொய்யிருட்டோ..
வார்த்தை எதுவும் இன்றி..
நெஞ்சழுத்தத் தோடே
நிமிர்ந்து கொலு விருக்கும்!
நீதியையே வேண்டிநிற்கும்
மரணப் பெரும் அமைதி!

மாயாண்டி. கன்மன்..
மருகர் துணையோடும்
தூய உயிர் கோவலனைப்
பேச முடி யா மல்கழுத்தை
நசித்துக் கொலை செய்தூர்ச்
சந்தியிலே போட்டுவிட்டுப்
போத்தல் முறித்த
களியாட்டில் மெய் கிறங்கி
அரசு நடத்துகின்ற
வஞ்சகப் பொய்யிருட்டின்
வார்த்தைச் சிலம்ப மாய்..
அஞ்சாறு சேவல்கள்!
நெஞ்சம் குலுங்கும் படியாகச்
சங்கொலிக்கும்!
எக்களித்தே மூடக் குயில் கத்தும்!
காக்கைகளும் வஞ்சகத்தின்
வெற்றிக்கே வாழ்த்திசைக்கும்!
நீதியைக் கோரும்
மரணப் பெரும் அமைதி!

நீதி கிடைக்கா நெருப்பு,
நெடு மூச்சாகும்..!
மூச்சோ,கடலை
முரசம் முழக்க வைக்கும்!
போச்சுதே! என்று வஞ்சப்
பொய்மை புடைத் தவறச்
செந்தழல்!வானம்
சிவந்திடச் சினந்து
அதோ
வந்தது கண்ணகி கண்ணெனச் செந்தீ!பொய்மையைத்தூக்கிலிட்டுப்
பொசுக்கி அந்தரத் திருந்தே
அழித்துத் துடைத்தது!
ஹ..ஹா
இந்த வரையில் விடிந்ததே! வையமெலாம்
சுந்தர நீதிச் சுடர்!

கடிதம்!!

எங்கள் கிராமக் கடிதம் கொடுக்கின்ற
சிங்கார வேலா!
சிலநாட்களாய் எனக்கு
ஆரும் கடிதம் அனுப்பாத காரணமேன்?
நீரும் எனை வஞ்சித்தல்
நீதியோ?
வட்டிக் குளக்கட்டு
வம்மியிலே சைக்கிளைச்
சார்த்தி வழக்கமாய்
நீர்திறந்து வாசிக்கும் காகிதங்கள்
ஊரில் உமக்கும்
உறவதிகம் என்பதையே
சேர்கிறது! போகட்டும்!
சிங்கார வேலரே!
அத்தனை அஞ்சலையும்
ஆரப் படித்துவிட்டு
பிய்த்தவற்றை ஏதேதோ
பேசி, சிரித்தபடி
வீசிவிட்டுப் போகின்றீர்!
வீணாய் குளச் சேற்றில்
ஊசி அவைதான்
உறைந்தழிந்து போகாதா?
சாமி அறிய உண்மை!
சத்தியமாய் என்னுடைய
மாமி மகள் மாம்பழம்போல்
மச்சாள். கடதாசி
போடுவதாய் சொன்னதொன்றும்
பொய்க்காது! நீர் குளத்தில்
போடும் கடிதங்க ளோடு அதையும்
வீசாதீர்! ஈதோ விலாசம்.
மகாவிஷ்ணு
கோயிலுக்கு முன்னால்,
குறுக்கொழுங்கை யால் கடந்து,
வாயிலிலே வம்மி
மரத்துக்குக் கீழிருக்கும்
பிள்ளையார் மேற்பார்த்து,
பெற்றவர்கள் பாராமல்,
வள்ளியக்கை மூலம்
வடிவேல் வசம் யாரும்
இல்லாத நேரம்
இதுகொடுக்க என்றிருக்கும்!
சொல்லிவிட்டேன்!
மேலும்....
சுணக்காதீர் காயிதத்தை!
காத்திருக்க ஒண்ணா!
கலியாண காரியம் ஓய்.!
பார்த்திருப்பேன் நாளும் பகல்!

விளக்கு வைப்பீர்!

கள்ளன்று, கஞ்சாவூம் அபினும் அன்று
கடல்கடந்து குடிபுகுந்த சரக்கும் அன்று!
சொல்லன்று, பொய்களையே தொகுத்த தன்று
சுதி யன்று, அரசியலால் சுரந்த தன்று
கல்லன்று, மரமன்று, குரங்கும் அன்று
கணிகையன்று கழகத்தின் பைலும் அன்று
தள்ளிநிலும் பண்டிதரே கவிதைக்கென்றும்
தயிர்போலும் நெஞ்சென்ப தறியீர் பாவம்!

நெஞ்சாளம் பார்த்தீர்முன் குளித்த போதென்
நெஞ்சகலம் பார்த்தீரே! நினைவில் உண்டோ?
அஞ்சாறாந் தரப்பொடிகள் வகுப்பில், தர்க்க
அதிசயங்கள் எம்மிடத்தில் அளந்தீர்! கேட்டோம்.
பஞ்சமா பாதகங்கள் பற்றிக் கூட
பண்போடு பேசுகிறீர், பார்த்தோம் நண்பா!
கஞ்சமலர் உறைவாளே கலையின் தெய்வம்
கடைச் சரக்கென் றெண்ணிவிட்டீர் காதல் பாவம்

உன்னினைவு போல்,அவளோர் ஊத்தை ஏறி
உருக்குலைந்த சிலையன்று, ஊனும் அன்று
என்னுதிரம் செழித்தோடும் இதயத் தேவி!
எவரோஉன் போல்சிறுவர் இயம்பக்கேட்டுக்
கண்விற்றுச் சித்திரமா வாங்கப் பார்த்தீர்!
கலைவளர்க்க வேறுகதி காணீர் போலும்?
இன்னுமொரு முறை இதுபோல் கனவு கண்டால்
எரித்திடுவீர் இதயத்தில் விளக்கை வைப்பீர்.

பிள்ளையார் விட்ட பிழை

தெற்கில், 'கத்தறகம
தெய்யோ'வாய் நீ முருகா
நிற்கின்றா யாமே நெடுநாளாய்
அற்புதங்கள்,
செய்வாயாம் அன்பரிடம்!
சேவிக்க வந்தேன்யான்
ஐயா முருகா அருள்!

கங்கையிலே ஆடி,
கதிர்வேலா நின்பாத
பங்கயத்துக் கென்றே பனிமலர்கள்
மற்றுமுள்ள
பூசைப் பொருள் கொணர்ந்தேன்
பூசிக்க, நான் காண
ஆசை முகத்தை அருள்வாய் திரை திறந்து!

ஐயர் அவர்கள் அழகுத் திரை தடவக்
கைகூப்பி உன்னழகைக் கண்ணாரக்
கண்டுருகி
காதலித்துன் பாதம் கடிமலர்கள் தூவவிடல்
பேதைக்கு நீ அருளும் பேறு..
எனக் கைகூப்பி

இவ்வா றிறைஞ்சி இரங்கி அழுதென்ன?
எவ்வளவு பாவி நான்! என்றுணர்ந்தும்
நின்றேங்கும்
அப்பொழுதும் 'ஹப்புறால' ஐயர் திரை திறவார்!
எப்பொழுது காண்பதினி..
யென்று மூச்சுவிட்டால்

தீர்த்தம், திருநீறு, மற்றும் பயிற்றங்காய்ச்
சோற்றுப் பிரசாதம் என்றெல்லாம்
கையினிலே
தந்தார்கள் பூசை சரி முடிந்ததென்றார்கள்.
கந்தா இதென்ன கதை
கேட்டேன் நான் ஐயா?

"எப்பொழுதும் இப்படித்தான்.
ஏனென்றால் நம் முருகன்
தப்பே புரிந்தான் தமிழர் தலை குனிய!"
"எப்படி?" என்பார் இருவர் அதைக்கேட்டு
"அப்படித்தான்! வள்ளியம்மையால்"
என்பான் மற்றொருவன்

ஒன்றே ஒருவர்க்குத் தாரமெனும் நந்தமிழர்
பண்புக்கு நேர்ந்த பழியை நினைந் தெங்கள்
பண்டிதர் செய்த பலமான கண்டனங்கள்
கண்டொழித்தான் கந்தன்!
கதிரமலையடைந்தான்!!

"தெய்வானைப் பெண்ணிருக்க,
செய்த பிழைக்காய் நாணி,
தெய்யோவாய் மாறியிந்த
தென்கதிரை தேடிவந்து,
வண்ணத் திரை மறைவில் வாழ்ந்து,
பயற்றங்காய்
உண்ணுகிறான்" என்றுரைக்கும் ஊர்!
நான் அதற்கெதிர்ப்பே!

வள்ளி அழகுக்கு வாயூறி,
வாய்க்காமற்
பிள்ளையார் காலைப் பிடித்து, மணம் புணர்ந்த
பிள்ளாய் உன்பேரில் பிசகில்லை!
அண்ணாச்சி
பிள்ளையார் விட்ட பிழை

கோபிக்கக் கூடாது..

சமயம் வளர்ந்ததுவா?
சாத்திரங்கள், மார்க்க நெறி,
சமுதாய வாழ்க்கை,
சரியாய் அமைந்ததுவோ?
பக்தி உணர்வு
பரவி வளர்ந்ததுவா?
முக்திக்கு மார்க்கம்
முளைத்துச் செழித்ததுவா?
கல்வி, பொருள், சிந்தனைகள்,
சான்றாண்மை எல்லாம் உயர்ந்துலகம்
எல்லாம் நிறைந்தனவா?

இல்லையென்பீர்.!

இல்லை எனில்
என்னதான் காரணங்கள்?
சொல்லுகிறீர் என்னுடைய
சோதரரே? சொல்லுங்கள்!
எட்டு நாள் அம்மனுக்கு
ஏற்பாடு செய்து விழா
கொட்டி முழக்கிக்
கொடிகட்டிக்
கொக்கரித்துவிட்டீர்கள்.
இந்த விழாவின் பெயராலே
பட்ட நன்மை என்ன இங்கே?
பக்தி விளைந்ததுவா?
முன்சொன்ன அந்த
முழுதும் இலை! ஆனால்
பொன்னண்ணர் பூசாரி
மேனியெங்கும் பொன் சொலிக்கும்
என்னென்ன வெல்லாம்
இருக்குதவர் மந்திரத்தில்!
பென்னம் பெரிய
பெரிய பெரும் மோதகங்கள்!
அந்த அளவுக்கும்
அப்பாலே தோற்றமுள்ள
மொந்தன் குலைகளொடு
முட்டைகளும், கோழிகளும்,
தென்னையின் கன்றுகளும்,
தேடிவரும் பூசாரி
பொன்னரண்ணை வீட்டினுக்கு!
போதாக் குறைக்கு வரும்
பச்சரிசி .. தேங்காய்..
பணமும்.. அவருக்கே !

எட்டுநாள் அம்மனுக்கு
ஏற்பாடு செய்து விழா
கொட்டி முழக்கும் ஐயா
கோபிக்கக் கூடாது
சட்டப்படி நம்
சமயம் வளர்ந்ததுவா?

எட்டுநாள் அம்மனுக்கு
ஏற்பாடு செய்த விழா
கொட்டு நன்மை என்னவென்று கூறு!

Sunday, July 27

கண்டக்டர் அண்ணனுக்கு..

சில்லறை இல்லையென்ற
பல்லவியைச் சொல்லியே
இல்லாத ஏழை இளித்தவாய் மக்களிடம்
சல்லி கறக்கின்ற சங்கதியை ஓரளவு
கல்வியறிவுள்ள கனவான்கள் தம்மிடத்தும்
காட்டிப் பிடிபட்ட கண்டக்டர் ஐயாவே!

"மிச்சம்தா" என்றால் மிரட்டுகிறீர்
" ஐந்து சதப்
பிச்சைக்காசுக்காய் ஏன்
பின்னால் திரிகின்றாய்.
ஐம்பதா நூறா நீர்
என்னிடத்தில் தந்ததொகை" என்பீர்!
பணம் கேட்கும் இன்னொருவர் தம்மிடமும்
"ஐந்து ரூபாய் தாளுக்காய் ஆலாய்ப்பறக்கின்றீர்
இந்தாரும்" என்று எறிவீர்
"எடும் டிக்கெட் சில்லறையை! இல்லை,
இறங்கும் இதில்"என்பீர்
எல்லோரிடமும் இவைகள் பலிக்குமா?

வசுக்கள் எமது
வரிப்பணத்தில் வாங்கியவை
வசுவை நடத்துனர் நீ வாங்குகிற சம்பளமும்
எங்கள் பணமே.
எசமானர் மக்களையா.
பைநிறையச் சில்றையை
பத்திரமாய் வைத்துவிட்டு
கைவிரித்துக் காட்டி இறக்கிவிட்டு,
கந்தோரில்
காசுகட்டிவிட்டுத் திரும்புகையில்
கைபோட்டுப் பையிலுள்ள
காசை யெடுத்தெண்ணிக்
கடையில் கொடுத்துத்
தாளாக்கிக் கொள்ளுகிற
தந்திரத்தை மக்களெல்லாம்
தூளாக்குவார்கள் துணிந்து.

பீற்றல் பெருமை

தங்கச்சி உன்னைத்
தயவாகக் கேட்கின்றேன்
எங்களையும் பார்க்க
எதிலே பெரியவள் நீ?
பீற்றற் பெருமை பிடித்து நடிக்கின்றாய்
ஊற்றையினைக் கண்டவள் போல்
உன்முகத்தை ஏன் சுழித்தாய்?

சட்டையின்றி நான்வயலில்
சம்பாதித்த பணத்தில்
பட்டணத்தே நீ போய் படித்தபடியாலா?
செல்லம்மா என்ற பெயர்
செப்பமில்லை என்று சொல்லி
செல்வி நீ பின்னால் செயஸ்ரீ ஆனதிலா?
எங்களையும் பார்க்க
எதிலே பெரியவள் நீ?

ஐந்தாம் முறையும்
பரீட்சையிலே முட்டையிட்டு
கந்தையா மச்சானைக்
காதலித்துக் கார் பிடித்துக்
காணாமல் போயெங்கோ
கலியாணம் செய்ததிலா?
பூணாரம் ஒவ்வொன்றாய்ப்
போனபின்னர் ஓடிவந்து,
ஊரில் முதுசொம்
வயல்விற்றுக் கொண்டு
'படான்'
கார் வாங்கி மார்ட்டின்
'கராச்'சிலே போட்டதிலா?
'போர்ட்' பலகை மாட்டி
முதலின்றியே பொருளை
ஈட்டுகின்ற வர்த்தகரின்
இல்லாள் நீ என்பதிலா?
எங்களையும் பார்க்க
எதிலே பெரியவள் நீ?

உன்வீடு மாடி.
குளியலறை கக்கூசும்
மின்சாரத்தோடு மிளிர்வதுவே!
ராசாக்கள்
சிம்மாசனம்போல்
விலையுயர்ந்த ஆசனங்கள்!
அம்மோய்! உன் 'அல்சேஷன்'
நாய்கள், குதிரைகளே!
வாடகை வீட்டின்
வசதிகளைக் கண்டதனால்
'மேடம்' நீ ஆகிவிட்ட
மேம்பாடு மேட்டிமையோ?
ஆடலும் பாடல் அரங்கும்,
அலங்காரச்
சோடனையும் பார்த்தவரைச்
சொக்கவைக்கும்!
ஆனாலும்
எங்களையும் பார்க்க
எதிலே பெரியவள் நீ?

கல்யாணமாம் உனது
காதல் புதல்விக்கு!
எல்லாம் பெரிய
தடபுடலாம்! எங்களுக்குச்
சொல்லவில்லை ஆனாலும்
சொந்தமென்று என்மனைவி
நல்லம்மா-உன்போல
நாகரிகம் இல்லை!
'மினி' அணியத் தெரியாத
காட்டு மிராண்டி!
எனக்குமந்த
'லோங்கிசு'கள் ஏதும் கிடையாது!
எருமைத் தயிரோடு
எங்கள் வயலின்
அரிசி, மரக்கறிகள்,
வாழைக்காய்,
எண்ணெய்ப் பணியாரம்
கொண்டு வந்தோம்.
கல்யாணச் சங்கை அணியாய்!
எத்தனையோ கார்களிலே
வந்த துரைமார்கள்
துரைச்சாணி மார்களெமைக்
கண்டு ஒரு விதமாய்ப்
பார்த்த
உதாசீனப்பார்வைக்கு..
உன்கணவர்.. அந்த
உயர்ந்த மனிதரிடம்
சொன்ன பதிலைச்
சுவரோரம் நான் கேட்டேன்!

"வெள்ளாமைக் காரனெங்கள் வேலன்!
இவள் பெண்டாட்டி நல்லம்மா!
என்றான்"
நாம்
நாகரிகம் இல்லாதோர்!
உண்மையே! நாங்கள்
உழைப்போர்.
உடுத்திருக்கும்
சின்ன உடை சொந்தச்
செலவிலே வாங்கியது!
எங்கள் களி மண்குடிசை..
வளவினுள்ளே
தெங்கு, பலா, கமுகு,
தேன்கதலி, மாங்காயும்,
எங்கள் உழைப்பே!
எம்வீட்டு நாய் எளிய
எங்களூர்ச் சாதி!
இறைச்சியொன்றும் தேவையில்லை!
ஏதும் இரவல்
பொருட்களிலை எங்களிடம்!
ஏது பிள்ளே! பட்டணத்தில்
எல்லாம் இரவலிலே
சீவிக்கும் நீங்களோ
கீர்த்தியுடையவர்கள்?

(முடிக்கப்படவில்லை)

Friday, July 25

காசுக்குப் பூவில்லை!

கோடை வெயிலில்
கொதிக்கும் மணல்தீயில்
வாடிக் கிடந்த என்
வாசலில் நிற்கிறபூக்
கன்று களில் பூத்த
கவினார் மலர்களைக்
கண்டு புதிய
கவிசெய்யும் காதலினால்
பார்த்தேன் ஒருநாள்,
பகலில். பரிதாபம்!
வேர்த்துப் புளுங்கி,
வீ எதுவும் ஈனாமல்
சோர்ந்து கிடந்தவை
சோற்று களையாலே!
வார்த்தை வருமா
வயிறு பசிக்கையிலே…
தூக்கி எறிந்தேன்,
துணிவோடு பேனாவை!
தூக்கினேன் வாளி!
துலா ஏன் அழுகிறதோ!
வார்க்கின்றேன் தண்ணீர்
வரிசைச் செடிகளுக்கு
பார்க்க முகைகள்
பருத்துத் திரண்டு
முறுகி வெடித்தன
மொட்டும் தளிரும்
குறுகிய நாட்களில்
குமரிகளாகி
நறுமணம் பரப்பும்
நகைமலர்க் கூட்டம்!
இறுகிய தந்தி
இசைசெயும் வண்டுகள்!
மூத்த வசந்தம்
முடிந்திடு முன்பொரு
பாத்தொடுத் திட ஓர்
பழநினை வெழுந்தது.
ஆத்திரம், கடுப்பு,
அவசரம்,- படைப்பினில்
மாத்திர மாக
மனத்தினை மடக்கி
பிரசவம் பெருங்களைப்
பெருந்துயில் நீங்கி
மறுமுறை விழித்தஓர்
மங்கையாய் வாசலில் வந்தால்,
ஆரோ ஒருவன்
அழகு சிந்தும் சிவந்த
சிரித்த முகத்துடன்
"வந்தனம் ஐயாஉம்
வாசலிலே பூக்களினை
கொய்தெடுக்க லாமா? நம்
கோயிலிலே பூசைக்கு.
ஐயர்தான் கொண்டுவரச்
சொன்னார். நான் ஆயட்டா?"
என்றான், எனக்குத்
தெரியுமெங்கள் கோயிலையர்
தன்னால் முடித்தாற்போல்
பூக்கொணரும் தட்டுகளில்
வாழைப் பழங்கள்,
வடை,முறுக்கு, மோதகம்,
தாழை மலர்போல்
விரிந்த மரவள்ளி
அவியல், கடலை,
அவல்,கற் கண்டு என்று
அவரவர் தட்டுகள்
அறிவதற்கு வைத்து
அனுப்புவார் என்கின்ற
அந்த ரகஸ்யம்
எனக்கு மறைக்கிறான்
என்றறிவேன் என்பதனைக்
காட்டிக் கொள்ளாமல்
"கடவுள் இடத்துள்ள
நீட்டான பக்தியினை
நெஞ்சார வாழ்த்துகிறேன்!
பூக்கொண்டு போனதட்டில்
பொங்கல் இருக்குமன்றோ?
ஆட்கள் அறியாமல்
ஆண்டவனார் வைக்கும்
பிரசாதம் இல்லையா?
பிள்ளாய்" எனக்கேட்டேன்!
"அருள் தருவார் அப்பன்
அதற்கே இப் பூக்கள்
பிரசாதம்வேண்டியல்ல"
என்றென்னைப் பார்த்துத்
திடமாகச் சொல்லிச்
சிரித்தான். "நிலம் கொத்தி
பாத்தியிட்டு நட்டு
பசளையிட்டு நீர்தினமும்
வார்த்தனைப் பேணி
வளர்ந்த செடிகளிலே
பூத்தவைதான் பூசைக்கும்
போடத் தகுந்தபுஷ்பம்!
வேர்த்தவன் யாரோ!
விளைவு கொள்வோன் வேற்றாளா?
என்னுழைப்பில் பூத்த
இவைகளை நீ கொய்தெடுத்து
உன்கணக்கில் சாமிக்கு
உபகரித்தால் ஆருக்கோ
அந்தப் பலன்" என்றேன்.
"ஆருக்கென்"றான் திருப்பி
"உன்றனுக் கில்லை
எனக்கே உரியதென்றேன்"
"அப்படியானால் நான்
ஆண்டவனார் பூசைக்கு
எப்படிப் பூப்பெறலாம்
என்றான்" எனைப்பார்த்து.
"பூக்கடைக்குப் போய் உன்
பொருள் கொடுத்து வாங்குவையேல்
ஆக்கம் கிடைக்கும்,
அது உன் உழைப்பன்றோ!
பூக்கடைக்கு வேண்டாம்
பொழுதும் போய் விட்டதிந்தப்
பூக்களையே கொய்துகொண்டு
பூசைக்குப் போ என்றேன்"
ஆசையொடும் பூக்களினை
ஆய்ந்தென் ஆருகில்வந்து
காசு சில என்னுடைய
கைக்குள் திணித்தானே!
"ஏடா மகனே
இறைவன் கருணையினை
காசுக்கு வாங்கும்
கருத்துடையன் அல்லேன்.
பூசை தொடங்கிற்று
போ!" என்றேன்.
காசோடும்
யோசித்தான் நின்றோர் நொடி!

-நீலாவணன்

எழுதியது :21.06.1968

என்பதற்காய் எழுதுகிறேன்

சினிமாவின் விளம்பரங்கள்
செறிந்திலங்கும் ஒரு சிறிய மூலைக்குள்ளே…
எனையுமொரு பொருட்டாக்கி,
இடம்பிடித்துக் கொண்டிருக்கும் புதிய செய்தி!
தனது 'சுவீப்' நம்பர்களும் கிடப்பனவோ..?
என அரவு புள்ளியாக
தினசரிகள் தினம் படிக்கும்
குருக்களையா கண்களுக்கும் தெரியும் செய்தி!

'சலூன்' கடையில் இருந்ததனைச்
சத்தமிட்டும் வாசிப்பார்! சலிப்பார்!
"ஆளை, விளங்கிறதோ?
நம்முடைய
விசர்ச் சின்னத்துரை மாஸ்டர் பற்றி,
இந்த இலங்கை சிலோன் புகழ்பெற்ற
பேப்பரிலே எழுதியுள்ளார் செய்தி!
பாவம்
எலும்பாக இதுவழியே திரிந்தாலும்…
ஆள் பெரிய எழுத்தா ளன் ஓய்!"

என்றுசொல்வார்;
அதைக்கேட்ட
எங்களூர் இளந்தாரி மார்கள் சேர்ந்து
ஒன்றுபட்டும் இரங்குதற்காய்
ஒரு புதிய பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்து,
"கண்டுவிட்டுப் போகாமல்..
கண்மூடிவிட்டானே மடையன்"என்று
ஒன்று விடா தென் படைப்பின் மேட்டிமைகள்
ஒவ்வொன்றாய் உரைப்பார்! உண்மை!

என்பதற்காய் எழுதுகிறேன்!
இதைவிட ஓர் கவிஞனுக்கு
என்ன வேண்டும்?
கண்டிதனைப் பொறுக்காது..
கயிலையிலே சிவனாரை மனைவியோடு
கண்ட ஒரு தாழம்பூக் கதையாக..
கலை ஆழிக் கரை கண்டார்போல்..
பண்டிதர்கள் பகர்வதெல்லாம்
காழ்ப்பு! அவர்தம்
கட்சி மனப்பான்மை காணும்!

-நீலாவணன்

ஆட்டுக்குடல் ராமசாமி அண்ணர்

ஆட்டுக்குடல் ராமசாமி அண்ணை,
உங்களிடம்
மாட்டுப்பட் டன்றைக்கு
மானக் குறைவுபட்ட
மாஸ்டர் எழுதும்
மரியாதை யான மடல்

வாஸ்தவந்தான் முன்னாள்
'வசு' வோட்டிக் கொண்டிருந்தீர்!
ஆனையிறவு வவுனியாப் பாதையிலே
ஆனையைக் கண்டு அடித்த 'பிறேக்'காலே
உங்கள் குடல் தெறித்துப்
போன கதையினை யாம்
ஓராயிரம் முறைகள்
உம் வாயால் நீர் பாடக்
கேட்டதுண்டு ! நன்றாய்க்
கிளிபோலப் பேசுகிறீர்!
ஆட்டுக்குடல் பொருத்தி,
அக்கதையை அச்சடித்து
பாடி வசுவில்
பணம்பண்ணிக் கொள்ளுகிறீர்!

பாடுபட்டு நாலு
பணத்தை உழைத்தெடுத்தால்..
சீனிதொட்டு மற்றுமுள்ள
தீன்பண்டம் அத்தனையும்
ஆனை விலை! தேடி
அகப்படுவதாவில்லை!
எங்கள் மனிதக் குடல்கள் .. இதையறியா!
சங்கடங்கள் ஒன்றிரண்டா?
சாற்றித் தொலையாதே!
எவ்வளவோ உண்டு
இலை குழைகள் நம்நாட்டில்.
அவ்வளவும் மேய்ந்தாலும்..
ஆரும்மைக் கேட்பதண்ணே!

சோறு செமிக்காதெனச் சொல்வீர்!
உம் வாயில்..
நாறுகின்ற கல்லோயா
நற் கருப்பஞ் சாறு மட்டும்..
சீரணமாகிச் சிறு நீராய்ப் போகிறது!
காரணம்
உம்வயிற்றின் உள்ளிருக்கும்
ஆட்டின் குடலில்
கரும்பின் குழைகள் செமித்து
நடைமுறைக்கு வந்திருக்க லாம்
நாம் அறியோம்.
குடலை விளம்பரம் பண்ணி -
குமர் குடும்பம்
என்று பணம்பண்ணி
ஈஸ்டன் பார் உட்புகுந்து
நின்றுங்கள்
ஆட்டுக் குடல் நிமிர
ஊற்றுவதைக்கண்டுவிட்டுத்தான் அன்று
காசு தரவிலையோஎன்று நினையாதீர்.
இல்லையண்ணே .

சிக்கனமாய்திட்டமிட்டுக்
காசைச் செலவு செய்து 'பஸ்'
கூலிமட்டோடும் நின்றிருந்த
மாசக் கடை நாளில் கேட்டீர்.
"பல நாட்கள்
போட்டேன் போய் வாரு"மென்றால் ..
பாட்டைத் தொடங்கிவிட்டீர்!
பாவமென்ன செய்தேனோ?
என்னுடைய அந்தஸ்தை
ஈரமற்ற நெங்சகத்தை
கிண்டல் செய் தீர்பலபேர் கேட்க!
"மனிதன்நிலையற்ற வாழ்வுடையன்!
நீர் செய்யும்
புண்யம்தலைகாக்கும்! "என்று
தருமோப தேசமும்செய்தீர்!
அப்போதில் சிலையாக நான் கோணிக்
கையைப் பிசைந்தேன்!
கடுகதியைக் காணேனே!

காலிரண்டும் இல்லாமல்
கல்லொன்றில் வீற்றிருந்து
தோல் நீக்கி முந்திரிகைக்
கொட்டை விற்கும் தொந்தியண்ணன்
கூப்பிட்டுன் வாயிலிரு
கொட்டைகளை வைத்ததனால்
காப்பாற்றப் பட்டேன்!
ஓர் கை சொத்தி கந்தையா
"தோழே வா!" என்றும்மைக்
கூப்பிட்டுத் தோலுரிந்த
வாழைப் பழம்வைத்தும்
வாய்மூடச் செய்கையிலே..
வந்து தொலைத்ததண்ணே 'வஸ்'.


- நீலாவணன்

ஆட்டுக்கார முடச்சிறுவன்

மூத்தப்பா செத்துப் போனார்
மூதேவிச் சனியன் ... இன்று
பார்த்துத்தான் சாக
இந்தப் பழம் கிழம் கிடந்தாராக்கும்
ஆத்திரம்! அவரைப்பார்க்க
அடங்குவ தாக இல்லை!
மூத்தப்பா செத்துப் போனார்
மூதேவி சாகட் டும்மே!

பின்னேரம் மணி மூன்றுக்குப்
பிள்ளைகள் ஐயா வீட்டுத்
திண்ணையில் திரண்டு நிற்பார் !
தெருவிலே காரும் நிற்கும்.
கண்ணகி.. கொல்லன்..
காவற்காரன்கள்.. பாண்டி மன்னன்..
இன்னும் கோ வலன்.. ராசாத்தி
எல்லோரும் ஏறிக் கொள்வார்!

இந்நேரம் காரில் சென்று
இறங்குவார் துறையில். தோணி
தண்ணீரில் மிதக்கும். வெள்ளைத்
தாமரைப் பூக்கள் வெள்ளிக்
கிண்ணம்போல் கிடக்கும்! கானான்
கிளைகளும், தாரா, கொக்கும்
என்னென்ன விதமாய் நிற்கும்
இதற்குமேல் வயல்கள்.. கோயில்..!

தோணியில் ஏறி அந்தத்
துறையினைக் கடப்பார்.. எங்கள்
மாணவர் மகிழ்ச்சி யாக..
மடத்தினில் தங்கு வார்கள்
பூணுவார் தம்தம் வேடம்
புனைந்திடு வார் எம் ஐயா
காணுவார் சபையோர்! ..கண்ணீர்..
கரகோசம் காண லாகும்!

இடையனாய் ஓடி வந்து
இரண்டொரு வசனம் பேசி
முடவனும் நடித்தேன் ஊரார்
முழுப்பேரும் சிரித்தார் கண்டு!
இடையிலே மூத்தப்பா தான்
இப்படிச் செய்து போட்டார்
இடையனாய் என்னைப் போல
இதயன்தான் நடிப்பான்..இன்று!

மூத்தப்பா.. என்னைத் தூக்கி
முட்டாசு வாங்கித் தந்து
காற்சட்டை புத்தகங்கள்
காசுகள் பிறவுந் தந்து
கூத்தாடச் செலவும் தந்தார்
கோவலன் போலச் செத்து
வார்த்தையில் லாமல் சும்மா
வளர்த்தி வைத் திருக் கிறார்கள்
மூத்தப்பா.. மூத்தப்பா.. உன்
மூச்செங்கே.. மூத்தப் பாவே!

ஆடுகள் பார்க்க வேறு
ஆளில்லை. அம்மா.. பாவம்
ஆடுகள் விற்றுத் தானே
அடுப்பினை எரித்தோம் அந்த
ஆடுகள்.. போனால்.. நாங்கள்
அதோகதி! அதற்காள் நான்தான்
நாடகம்.. படிப்பு.. எல்லாம்
நமக்கினி எதற்கு?.. வேண்டாம்!.


-நீலாவணன்