Friday, July 25

காசுக்குப் பூவில்லை!

கோடை வெயிலில்
கொதிக்கும் மணல்தீயில்
வாடிக் கிடந்த என்
வாசலில் நிற்கிறபூக்
கன்று களில் பூத்த
கவினார் மலர்களைக்
கண்டு புதிய
கவிசெய்யும் காதலினால்
பார்த்தேன் ஒருநாள்,
பகலில். பரிதாபம்!
வேர்த்துப் புளுங்கி,
வீ எதுவும் ஈனாமல்
சோர்ந்து கிடந்தவை
சோற்று களையாலே!
வார்த்தை வருமா
வயிறு பசிக்கையிலே…
தூக்கி எறிந்தேன்,
துணிவோடு பேனாவை!
தூக்கினேன் வாளி!
துலா ஏன் அழுகிறதோ!
வார்க்கின்றேன் தண்ணீர்
வரிசைச் செடிகளுக்கு
பார்க்க முகைகள்
பருத்துத் திரண்டு
முறுகி வெடித்தன
மொட்டும் தளிரும்
குறுகிய நாட்களில்
குமரிகளாகி
நறுமணம் பரப்பும்
நகைமலர்க் கூட்டம்!
இறுகிய தந்தி
இசைசெயும் வண்டுகள்!
மூத்த வசந்தம்
முடிந்திடு முன்பொரு
பாத்தொடுத் திட ஓர்
பழநினை வெழுந்தது.
ஆத்திரம், கடுப்பு,
அவசரம்,- படைப்பினில்
மாத்திர மாக
மனத்தினை மடக்கி
பிரசவம் பெருங்களைப்
பெருந்துயில் நீங்கி
மறுமுறை விழித்தஓர்
மங்கையாய் வாசலில் வந்தால்,
ஆரோ ஒருவன்
அழகு சிந்தும் சிவந்த
சிரித்த முகத்துடன்
"வந்தனம் ஐயாஉம்
வாசலிலே பூக்களினை
கொய்தெடுக்க லாமா? நம்
கோயிலிலே பூசைக்கு.
ஐயர்தான் கொண்டுவரச்
சொன்னார். நான் ஆயட்டா?"
என்றான், எனக்குத்
தெரியுமெங்கள் கோயிலையர்
தன்னால் முடித்தாற்போல்
பூக்கொணரும் தட்டுகளில்
வாழைப் பழங்கள்,
வடை,முறுக்கு, மோதகம்,
தாழை மலர்போல்
விரிந்த மரவள்ளி
அவியல், கடலை,
அவல்,கற் கண்டு என்று
அவரவர் தட்டுகள்
அறிவதற்கு வைத்து
அனுப்புவார் என்கின்ற
அந்த ரகஸ்யம்
எனக்கு மறைக்கிறான்
என்றறிவேன் என்பதனைக்
காட்டிக் கொள்ளாமல்
"கடவுள் இடத்துள்ள
நீட்டான பக்தியினை
நெஞ்சார வாழ்த்துகிறேன்!
பூக்கொண்டு போனதட்டில்
பொங்கல் இருக்குமன்றோ?
ஆட்கள் அறியாமல்
ஆண்டவனார் வைக்கும்
பிரசாதம் இல்லையா?
பிள்ளாய்" எனக்கேட்டேன்!
"அருள் தருவார் அப்பன்
அதற்கே இப் பூக்கள்
பிரசாதம்வேண்டியல்ல"
என்றென்னைப் பார்த்துத்
திடமாகச் சொல்லிச்
சிரித்தான். "நிலம் கொத்தி
பாத்தியிட்டு நட்டு
பசளையிட்டு நீர்தினமும்
வார்த்தனைப் பேணி
வளர்ந்த செடிகளிலே
பூத்தவைதான் பூசைக்கும்
போடத் தகுந்தபுஷ்பம்!
வேர்த்தவன் யாரோ!
விளைவு கொள்வோன் வேற்றாளா?
என்னுழைப்பில் பூத்த
இவைகளை நீ கொய்தெடுத்து
உன்கணக்கில் சாமிக்கு
உபகரித்தால் ஆருக்கோ
அந்தப் பலன்" என்றேன்.
"ஆருக்கென்"றான் திருப்பி
"உன்றனுக் கில்லை
எனக்கே உரியதென்றேன்"
"அப்படியானால் நான்
ஆண்டவனார் பூசைக்கு
எப்படிப் பூப்பெறலாம்
என்றான்" எனைப்பார்த்து.
"பூக்கடைக்குப் போய் உன்
பொருள் கொடுத்து வாங்குவையேல்
ஆக்கம் கிடைக்கும்,
அது உன் உழைப்பன்றோ!
பூக்கடைக்கு வேண்டாம்
பொழுதும் போய் விட்டதிந்தப்
பூக்களையே கொய்துகொண்டு
பூசைக்குப் போ என்றேன்"
ஆசையொடும் பூக்களினை
ஆய்ந்தென் ஆருகில்வந்து
காசு சில என்னுடைய
கைக்குள் திணித்தானே!
"ஏடா மகனே
இறைவன் கருணையினை
காசுக்கு வாங்கும்
கருத்துடையன் அல்லேன்.
பூசை தொடங்கிற்று
போ!" என்றேன்.
காசோடும்
யோசித்தான் நின்றோர் நொடி!

-நீலாவணன்

எழுதியது :21.06.1968

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home