Friday, January 22

ஓவியம் ஒன்று!

என்னடியைத் தொட்டெடுத்தான்
தன்மடியில் இணைத்தான்
இரவெல்லாம் விழிமழையின்
அருவியினிலே நனைந்தான்!
கன்னமலர் கொண்டொற்றி
ஈரமெல்லாம் துடைத்தான்
கனவின் இழை தனில்நினைவின்
சரமொன்று தொடுத்தான்!


தன்னிதழால் ஏந்தியதைச்
சூடிஇடை பறித்தான்
தமிழ்க்கவியில் பிழிந்தெடுத்த
சுவைத்துளிகள் தெளித்தான்
என்னசுகம் மெய்ம்மறந்தேன்
என்றாலும் மறுத்தேன்
இரவுகுழல் நரைத்ததை
இருவருமே வெறுத்தோம்!


வானஅரை வட்டத்து
மையத்தின் முகட்டில்
வயங்குமதிக் கலசத்தில்
மதுரமதுத் தளும்பும்
மானமிழந்தான், மிகவும்
மாந்தியதில் புதைந்தான்!
மயங்கி, இசை நரம்புகளை
வருடிஎனைத் ததைந்தான்!


கானநதிச் சங்கமத்தில்
மீனெனவே குறித்தான்
கரங்களிலே அலையள்ளிப்
பெருந்தாகம் தணித்தான்!
நாணமெனும் செந்திரைக்குள்
நானொளிந்தேன்! விழித்தால்...
நாளொன்று புலர்ந்ததடி
நாமதனைச் சபித்தோம்!


சிப்பியொன்றைச் சிமிழாக்கி
முத்துகளை அரைத்தான்
சிவப்புவண்ணக் குழம்புசெய்தான்
தூரிகையைத் துவைத்தான்!
அப்பியப்பி அழித்தழித்து
அழுந்தஅதைப் பதித்தான்!
‘அருமையிது’ எனஅவனே
தனையிழந்து ரசித்தான்!


எப்படியான் இனியும் எனை
ஒளித்தல்தகும்? இசைந்தேன்!
இயன்றவரை உதவிபல
புரிந்தவனைப் புகழ்ந்தேன்!
அப்பொழுதும் புலர்ந்ததடி
நாமதனைத் துதித்தோம்
அவன்படைத்த ஓவியத்தை
நயந்துமிகக் களித்தோம்!

கொஞ்ச வந்தான்

கொஞ்ச வந்தான்! குனிந்தேன்! அஞ்சிக்
கொஞ்சம் பின்வாங்கி நின்றான்
கொஞ்ச வந்தான் பிறகும் தடுத்தேன்விழி
கும்பிடவும்
கெஞ்சி நின்றான்! பணிந்தான்! நகைத்தான்
சற்று கிட்டவந்தான்
கொஞ்ச வந்தான்! குனியாது நின்றேன் அவன்
கொள்கை வென்றான்!


மீட்டுகின்றேன், நின் இதயத்து வீணையை
மெல்ல மெல்ல
கேட்டு கின்றான்! மறுத்தேன்! கடைக்
கண்களினால் கிளறி
மீட்டும் வந்தான்! எனைப் பாட்டுரைத் தான்!
அவன் மென்மையிலே
பூட்டவிழ்ந்தேன்! கரும் பூட்டிச் சென்றான்,
பின்னர்
போய்த் துயின்றேன்.

இரவு வருகின்றது

இரவு வருகின்றதே - இளைய
இரவு வருகின்றதே
உருவி உயிர் பருகும்
அரவம் என நெடிய
இரவு வருகின்றதே!


இமைகள் செயலொழிய
இதய அலைகள் எழ
சுமைகள் சுடுதுளியாய்
சொரிய.. ஒரு.. கரிய
இரவு வருகின்றதே – கரிய
இரவு வருகின்றதே


முதலில் பலதடவை
முடுகி நுகர் சுவைகள்
எதனை நினைதல் - விடல்?
எதனை விலகுவது..?


பதுமை யெனவமரில்
படரும் கனவு – மனப்
புதரில்.. புதிய தளிர்
விரியும்!... சருகுகளாய்
உதிர – உடல் குளிர
உதிரம் உறை கொடிய

இரவு வருகின்றதே நெடிய கரிய கொடிய
இரவு வருகின்றதே

தயவு செய்து சிரியாதே

தளிருடலை நெளியாதே
தயவுசெய்து சிரியாதே
மேலாடை
கிழியுமெனின் எறிவாய், என்
ஹிருதயமும் அதுபோலா..?
நிமிராதே!
விழிகணையின் விசையினில் விண்
வெளியிலெனை எறியாதே!

மறுகாலும்..
தளிருடலை நெளியாதே
தயவு செய்து சிரியாதே!
உபகாரம்?


விரல் நுனிகள் சுவையாதே!
வெகுளி யெனக் குழையாதே!
புயலூடோர்
சிறுபடகை நுழையாதே!
சுழியில் விழ நகையாதே!
சுனையூறல்
பருகஎனை அழையாதே!
பகடிகளும் மொழியாதே!
விதியோடும்
பொருதஎனைப் பணியா தே!
பொறு... உயிரைத் திருகாதே!
உபகாரம்!