Monday, July 28

கோபிக்கக் கூடாது..

சமயம் வளர்ந்ததுவா?
சாத்திரங்கள், மார்க்க நெறி,
சமுதாய வாழ்க்கை,
சரியாய் அமைந்ததுவோ?
பக்தி உணர்வு
பரவி வளர்ந்ததுவா?
முக்திக்கு மார்க்கம்
முளைத்துச் செழித்ததுவா?
கல்வி, பொருள், சிந்தனைகள்,
சான்றாண்மை எல்லாம் உயர்ந்துலகம்
எல்லாம் நிறைந்தனவா?

இல்லையென்பீர்.!

இல்லை எனில்
என்னதான் காரணங்கள்?
சொல்லுகிறீர் என்னுடைய
சோதரரே? சொல்லுங்கள்!
எட்டு நாள் அம்மனுக்கு
ஏற்பாடு செய்து விழா
கொட்டி முழக்கிக்
கொடிகட்டிக்
கொக்கரித்துவிட்டீர்கள்.
இந்த விழாவின் பெயராலே
பட்ட நன்மை என்ன இங்கே?
பக்தி விளைந்ததுவா?
முன்சொன்ன அந்த
முழுதும் இலை! ஆனால்
பொன்னண்ணர் பூசாரி
மேனியெங்கும் பொன் சொலிக்கும்
என்னென்ன வெல்லாம்
இருக்குதவர் மந்திரத்தில்!
பென்னம் பெரிய
பெரிய பெரும் மோதகங்கள்!
அந்த அளவுக்கும்
அப்பாலே தோற்றமுள்ள
மொந்தன் குலைகளொடு
முட்டைகளும், கோழிகளும்,
தென்னையின் கன்றுகளும்,
தேடிவரும் பூசாரி
பொன்னரண்ணை வீட்டினுக்கு!
போதாக் குறைக்கு வரும்
பச்சரிசி .. தேங்காய்..
பணமும்.. அவருக்கே !

எட்டுநாள் அம்மனுக்கு
ஏற்பாடு செய்து விழா
கொட்டி முழக்கும் ஐயா
கோபிக்கக் கூடாது
சட்டப்படி நம்
சமயம் வளர்ந்ததுவா?

எட்டுநாள் அம்மனுக்கு
ஏற்பாடு செய்த விழா
கொட்டு நன்மை என்னவென்று கூறு!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home