Monday, July 28

பிள்ளையார் விட்ட பிழை

தெற்கில், 'கத்தறகம
தெய்யோ'வாய் நீ முருகா
நிற்கின்றா யாமே நெடுநாளாய்
அற்புதங்கள்,
செய்வாயாம் அன்பரிடம்!
சேவிக்க வந்தேன்யான்
ஐயா முருகா அருள்!

கங்கையிலே ஆடி,
கதிர்வேலா நின்பாத
பங்கயத்துக் கென்றே பனிமலர்கள்
மற்றுமுள்ள
பூசைப் பொருள் கொணர்ந்தேன்
பூசிக்க, நான் காண
ஆசை முகத்தை அருள்வாய் திரை திறந்து!

ஐயர் அவர்கள் அழகுத் திரை தடவக்
கைகூப்பி உன்னழகைக் கண்ணாரக்
கண்டுருகி
காதலித்துன் பாதம் கடிமலர்கள் தூவவிடல்
பேதைக்கு நீ அருளும் பேறு..
எனக் கைகூப்பி

இவ்வா றிறைஞ்சி இரங்கி அழுதென்ன?
எவ்வளவு பாவி நான்! என்றுணர்ந்தும்
நின்றேங்கும்
அப்பொழுதும் 'ஹப்புறால' ஐயர் திரை திறவார்!
எப்பொழுது காண்பதினி..
யென்று மூச்சுவிட்டால்

தீர்த்தம், திருநீறு, மற்றும் பயிற்றங்காய்ச்
சோற்றுப் பிரசாதம் என்றெல்லாம்
கையினிலே
தந்தார்கள் பூசை சரி முடிந்ததென்றார்கள்.
கந்தா இதென்ன கதை
கேட்டேன் நான் ஐயா?

"எப்பொழுதும் இப்படித்தான்.
ஏனென்றால் நம் முருகன்
தப்பே புரிந்தான் தமிழர் தலை குனிய!"
"எப்படி?" என்பார் இருவர் அதைக்கேட்டு
"அப்படித்தான்! வள்ளியம்மையால்"
என்பான் மற்றொருவன்

ஒன்றே ஒருவர்க்குத் தாரமெனும் நந்தமிழர்
பண்புக்கு நேர்ந்த பழியை நினைந் தெங்கள்
பண்டிதர் செய்த பலமான கண்டனங்கள்
கண்டொழித்தான் கந்தன்!
கதிரமலையடைந்தான்!!

"தெய்வானைப் பெண்ணிருக்க,
செய்த பிழைக்காய் நாணி,
தெய்யோவாய் மாறியிந்த
தென்கதிரை தேடிவந்து,
வண்ணத் திரை மறைவில் வாழ்ந்து,
பயற்றங்காய்
உண்ணுகிறான்" என்றுரைக்கும் ஊர்!
நான் அதற்கெதிர்ப்பே!

வள்ளி அழகுக்கு வாயூறி,
வாய்க்காமற்
பிள்ளையார் காலைப் பிடித்து, மணம் புணர்ந்த
பிள்ளாய் உன்பேரில் பிசகில்லை!
அண்ணாச்சி
பிள்ளையார் விட்ட பிழை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home