Monday, July 28

கடிதம்!!

எங்கள் கிராமக் கடிதம் கொடுக்கின்ற
சிங்கார வேலா!
சிலநாட்களாய் எனக்கு
ஆரும் கடிதம் அனுப்பாத காரணமேன்?
நீரும் எனை வஞ்சித்தல்
நீதியோ?
வட்டிக் குளக்கட்டு
வம்மியிலே சைக்கிளைச்
சார்த்தி வழக்கமாய்
நீர்திறந்து வாசிக்கும் காகிதங்கள்
ஊரில் உமக்கும்
உறவதிகம் என்பதையே
சேர்கிறது! போகட்டும்!
சிங்கார வேலரே!
அத்தனை அஞ்சலையும்
ஆரப் படித்துவிட்டு
பிய்த்தவற்றை ஏதேதோ
பேசி, சிரித்தபடி
வீசிவிட்டுப் போகின்றீர்!
வீணாய் குளச் சேற்றில்
ஊசி அவைதான்
உறைந்தழிந்து போகாதா?
சாமி அறிய உண்மை!
சத்தியமாய் என்னுடைய
மாமி மகள் மாம்பழம்போல்
மச்சாள். கடதாசி
போடுவதாய் சொன்னதொன்றும்
பொய்க்காது! நீர் குளத்தில்
போடும் கடிதங்க ளோடு அதையும்
வீசாதீர்! ஈதோ விலாசம்.
மகாவிஷ்ணு
கோயிலுக்கு முன்னால்,
குறுக்கொழுங்கை யால் கடந்து,
வாயிலிலே வம்மி
மரத்துக்குக் கீழிருக்கும்
பிள்ளையார் மேற்பார்த்து,
பெற்றவர்கள் பாராமல்,
வள்ளியக்கை மூலம்
வடிவேல் வசம் யாரும்
இல்லாத நேரம்
இதுகொடுக்க என்றிருக்கும்!
சொல்லிவிட்டேன்!
மேலும்....
சுணக்காதீர் காயிதத்தை!
காத்திருக்க ஒண்ணா!
கலியாண காரியம் ஓய்.!
பார்த்திருப்பேன் நாளும் பகல்!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home