Monday, July 28

வெல்க

"ஏழாம் ஆள்" என்றாய் மைந்த.
ஏன்விம்மி அழுகின்றாய் போ!
நாளெல்லாம் படித்தாய் - உண்மை
நானுந்தான் கண்டேன், ஓராம்
ஆளாக வருவேன் என்றும்
அம்மாவைப் பார்த்துச் சொன்னாய்.
வேளைதான் சரியா யில்லை
வெட்கமேன்? அழாதே போபோ!

முப்பத்தி யெட்டுப் பேர்கள்
மொத்தமுன் வகுப்பு நண்பர்.
எப்படிப் படித்தார்! ஈற்றில்
என்னவாய் வந்தார். அந்த
முப்பத்தி யெட்டாம் பிள்ளை
மூடனா! அறுவர் போக
முப்பத்தோர் மாணாக்கர்க்குள்
முதல்வன் நீ! ஏழாம் பிள்ளை!

முப்பது பேரைவென்ற
முதலாம் ஆள் நீயே! அந்த
முப்பத்தி யெட்டாம் பிள்ளை
முழுதாக ஆரை வென்றான்!
அப்படி யிருந்தும் அந்த
அவன் என்ன சொன்னான் தம்பி
"அப்பா என் வகுப்பில் நான்தான்
அதிபெரும் புள்ளி" என்றான்.

"எப்படி?" என்றார் அப்பா
"இறுதியாள் வகுப்பில் நான்தான்.
அப்படிப் பார்த்தால் முப்பத்
தெட்டன்றோ இலக்கம் நான்தான்!"
"எப்போதும் புளுகும் பொய்யும்!
எமனே போ" என்றார் அப்பா!
சுப்பையா சினிமாப் பார்க்க
சோக்கோடு கிளம்பிப் போனான்.

அவன்போலப் போகாதே நீ!
ஆறுபேர் தானே இன்னும்.
கவனமாய் முயற்சி செய்தால்
கட்டாயம் வெல்வாய்! ஈங்கோர்
நவஉல கமைக்க உன்னை
நம்பினேன் தென்பு கொள்வாய்!
கவலைகள் விடுக மீண்டும்
கடமையைத் தொடர்க! வெல்க!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home