Monday, July 28

ஒரு பந்தும் ஒரு தாயும்

பேசத் தெரியாத, என் பிள்ளை,
நெடுநாளாய்
ஆசையோடு வைத்து
விளை யாடும் அழகான
பந்தோ டிருந்தான் படலைக்குள்,
யாரோ பெண்
குந்தியிருந்தாள் குழந்தை அருகினிலே,
ஆஸ்பத் திரியிருந்து
வந்திருந்தாள் அம்மாது
பேசத் தெரியாத
பிள்ளையெனக் கண்டறிந்தாள்
ஆசையொடு தன்கழுத்தைக்
கட்டி, "அம்மா பந்து" என்று
பேசும் பொற் சித்திரத்தைப்
பெற்றமனம் எண்ணியது.
பந்தொன்று வாங்கப் பணமில்லை!
ஆதலினால்
சந்தர்ப்பம் தன்னைச்
சரியாய்ப் பயன்படுத்திக்
கொண்டாள்!
அவளுடைய
கொங்கைகள் மூன்றாயின!!
கண்ட ஒருவர்
கதைசொல்லும் முன்பே அத்
தாய்மை நடந்து
தலை மறைந்து போயிற்று!
வாய்பேசா என்மைந்தன்,
தாயோ டிவை சொன்னான்.
கண்களில் நீர் சோரக்
கை காட்டி அழுகின்றான்.
கண்துடைத்தேன், பிள்ளைக்கு.
"கள்ளி" என்றாள் என்துனைவி.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home