Thursday, August 21

கவிதை

சனத்துள், மனித குலத்துள் சமைந்து பொதுவாகித்
தனித்துப் புவியில் நிலைக்கத் தகுந்த பொருளாகி
மனத்தின் அகண்ட வலைக்குள் புகுந்து சிறையாகும்
நினைப்பில் குதிர்ந்த தொகுப்பின் விளக்கம் கவியாகும்.

கணக்கில் குறித்த இடத்தில் இலக்கம் பிசகாமல்
இணக்கப் படுத்தல்.அதைப்போல் இசைத்துத் தெளிவாக
மினுக்கி மினுக்கி விதிர்த்து மதர்த்த அழகோடு
உணர்ச்சிப் பெருக்கில் நனைத்துப் பிழிந்த கவியாகும்.

பழைமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி
அழகும் பொலிந்து அறமும் புதைந்து கலையாகி
இளமைக் கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும்.

தினகரன் 16.6.63

Monday, August 18

துயில்

இந்த உலகில்
இருந்த சில நாழிகையில்
எந்தச் சிறிய உயிரும்
என் ஹிம்சையினால்
நொந்தறியா...
யாருமெனை நொந்ததிலை" என்கின்ற
அந்த இனிய நினைவாம்
அலங்கிர்தத்
தாலாட்டுக் (கு)
என்னிதயம் தந்து
பழம் பிழைந்த
பால் கொஞ்சம் ஊட்டப்பருகி,
அதைத் தொடர்ந்து
கால் நீட்டிப் போர்த்தேன்
என் கம்பளியால்.
தாலாட்டில்...
மாலாகி என்னை
மறந்து துயில்கையில்....
வீண் ஒப்பாரி வைத்திங்(கு)
உலகத்தைக் கூட்டாதே!
அப்பால் நடப்பை அறிவேன்...
அதை ரசிக்க
இப்பயலை மீண்டும்
எழுப்பித் தொலைக்காதே!
தப்பாக எண்ணாதே
தாழ்ப்பாளைப் பூட்டிவிடு!

மேளங்கள் கொட்டி, என்றன்
மேட்டிமையைக் காட்டாதே!
தாளம் மொழிந்து
நடிக்காதே! என் பயண
நீளவழிக்கு, நில
பாவாடை தூவாதே!
ஆழம் அகலம்.....
அளந் தெதுவும் பேசாதே!
மோனத்தில்
உன்னுணர்வை மொண்டு,
இதய நெடும் வானத்தில்
நீ தீட்டி வைத்திருக்கும்
என்னுடைய
தீன உருவை
முழுதும் வழித் தெடுத்து
மீன் விழியில் இட்டு
விளக்கேற்றி
தொட்டிலில் நம்
காவியத்தைப் பாடிக் களி!
பின், இயற்கையொடும்
சாவியலை எள்ளிச் சிரி!

முருங்கைக்காய்

கனநாள் கழிந்தொரு கவிதை சுரந்தது!
கோப்பியொன் றடித்தேன்;
கொப்பியை விரித்தேன்
கூப்பிட்டாள் இவள்?
ஏனோ? என்றேன்.

கறிக்குப்
புளியம் பழம்போல றால்
வாங்கியிருக்கின்றேன்.
அதற்குள் வைத்துக் குழம்பு வைக்க
முருங்கைக் காய்தான் ருசியாய் இருக்கும்!
ஆதலால்,
அதோநம் வாசல் முருங்கையின்
உச்சிக் கந்தில்...
ஒன்று...இரண்டு....மூன்று,
நீண்டு முற்றிய காய்கள்
ஒருக்கால்...ஏறி
உசுப்பி விடுங்கள்; என்றாள்!

மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!
அதற்காய் இசைந்தேன்;
அவள் விருப்பின்படி
முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்தேன்!

அந்தோ! வந்த அருங்கவி
இந்த அமளிகண் டெங்கோ மறைந்ததே!

உறவு

மரணித்துப்போன எங்கள்
மானாகப் போடிப்
பெரியப்பா..
நீர் ஓர் பெரிய மனிதர் தான்!

பெட்டி இழைத்தும்
பிரம்பு பின்னல் வேலை செய்தும்
வட்டிக் குளத்து வரால் மீன் பிடிக்கக்
கரப்புகளும் கட்டி விற்றுக்
காலத்தை ஓட்டும் ஒரு கிழவன்
என்றே நம்மூர் அறியும்
நேற்றுவரை.

பத்துநாள் தொட்டுப்
பகலிரவாய்ப் பாய்மீதில்
வைத்தியமே இன்றி
வயிற்றா லடியோடும்
சத்தி எடுத்தும் வாய்
சன்னீ பிசத்தியும்
செத்தும் பிழைத்தும் கிடந்தீர்
சுவரோரம்.

‘எட்டு நாளாக இரணம் ஏதும்
குடலுக்குட் செல்லவில்லை’
என உருகி உம்மனைவி வள்ளி
புளுங்கல் அரிசவித்த வெந்நீரை
அள்ளி உமக்கு பருக்குகையில்
நீர்-அவளை
ஐம்பது ஆண்டாய்
அனுபவித்துக் கொண்டதற்கும்
ஒன்பது பிள்ளைகளை உற்பவித்து
பெற்றதற்கும்
ஈற்றில் உமக்காய்
ஊற்றை அளைந்ததற்கும்
உம்குறைகள் கேட்டதற்கும் ஈடாக
ஓர் வார்த்தை யேனும் இயம்பாமல்
போய் விட்டீராமே
புலம்புகிறாள் வள்ளியம்மை.

நாய்படாப் பாடுமது
நோயிலவள் பட்டதுண்மை
என்றாலும் ஓர் வகையில்
ஆனந்தம் வள்ளிக்கு
என்ன வென்றால்
தன்புருசன் மானாகப் போடிக்கும்
எத்தனைபேர் சொந்தம் ! அதோ
எக்கவுண்டன் எஞ்சினியர்
வைத்திய கலா நிதிகள்
வர்த்தகர் பேராசிரியர்
சத்தா சமுத்திரந்தான்
சாதிசனம்
என்பதனால்.

தந்தி கிடைத்து
மிகநொந்து பட்டு வந்தார்கள்
அந்தி வரைக்கும் ஏதும்
ஆகாரம் தின்னாமல்
குந்தியிருந்து
குளறி அழுதார்கள்
ஐந்தாறு காரில்
இரவே ஊர்போய் விட்டார்.

எத்தனைபேர் சுற்ற மிந்த
ஏழைக் கிழவனுக்கு
இத்தனை நாள் மட்டுமிது
யாருக்கும் தெரியாது
உண்மையினைக் கண்டெங்கள்
ஊர்-விரலை மூக்கில்வைக்கும்
வண்ணம் மறைவாக வாழ்ந்தீர்
இறவாமல்….

இன்னும் உயிரோடே இருந்தீரே யாமாகில்
என்ன வகையாய் அறிவோம் உறவினரை
செத்தாலும் செத்தீர் நும்
செல்வக் குடும்பத்தைப்
பத்தியமாய்ப் பார்த்திந்தப்
பாரில் வழங்கி வரும்
உண்மை உறவறியூம் ஊர்.

ஓ..வண்டிக்காரா..

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு!
நாமும் நமது பயணந் தொலையக்
கலந்து கொள்வோம் கூட்டு! - ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா....

பனியின் விழிநீர் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே - ஓட்டு

ஓ என் அருமை வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போமுன் ஓட்டு

Friday, August 15

வெறிக்குது

தங்க நிலாவான் தவழ்ந்து வருகுது – அதில்
தாவியே ஏறிட ஆசை பெருகுது!
மங்கை உன் அன்பிலென் மனம் உருகுது – தீயில்
மாந்தளிர் போலவே உடல் கருகுது!

முல்லையில் வண்டினம் மொய்த்துக் கிடக்குது – அந்த
மோகக்கிறுக்கிலே ராகம் பிறக்குது!
கொல்லையில் குளிர் தென்றல் நடக்குது – அடி
கோதை உனைக் கொஞ்ச உள்ளந் துடிக்குது

‘அத்தான்’ என்றொரு தத்தை அழைக்குது – ‘வா
அன்பே’ என்றதன் சோடி அணைக்குது!
ஒத்திய முத்தமோ பித்தம் விளைக்குது – பாவி!
உன்நினை வாற்செயல் யாவும் பிழைக்குது

நுரைக்கனி யின்விதை நுங்கிற் சுழலுது – அந்த
நோக்கிலே என்நெஞ்சு நோயில் உழலுது!
வரைக்குமேல் அதோ மதியம் தெரியுது – நீ
வராதி ருந்திடில் தேகம் எரியுது!

வில்வக் கனிவந்துன் நெஞ்சில் இருந்தது – விழி
வேல்பட்ட புண்ணுக்கு வேண்டும் மருந்தது!
புல்லி அணைத்திடில் மார்பின் விருந்தது – அதை
பூங்கொடி போல் இடைதாங்கி வருந்துது!

வன்ன இதழ் எனதெண்ணம் பறிக்குது – அனல்
வாகை மலரதன் வண்ணம் குறிக்குது
கன்னலின் சாறென இனிமை செறிக்குது – பழங்
கள்ளை அருந்திய தென்ன வெறிக்குது!

காதல்

இளமையெனும் அகல் விளக்கில்
இனியகனா எனுமுயர்ந்த எண்ணெய் வார்த்து
பழமையெனும் திரியிட்டு
பயனூறும் கற்பனையில் படிய வைத்தேன்
அழகெனும் பொருளனைத்தும்
அன்பென்னும் சோதிகலந் தன்பு செய்யும்
எழில் வாழ்வு காண்பதற்கே
எண்ணியெண்ணி ஏங்குகிறேன் எந்த நாளும்!

இருளென்ற கரும்பேடு
இரவெல்லாம் அடைகாத்து ஈன்ற குஞ்சாம்
இரவியெழும் காட்சியிலே
என்னிதயம்பறிகொடுத்து எட்டாவானில்
மருவியவன் தவழ்கையிலே
மணித்தேரை பார்ப்பது போல் மாலை மட்டும்
உருகி நின்றேன்!அவனோ என்
உளத்திலெழும் அன்பலையை உணர்ந்தானில்லை!

காலையிளம் கதிர் கண்டு
காத்துவைத்த நாணமெல்லாம் காற்றில் விட்டுச்
சோலையிலே சிரித்த புது
மலரழகில் உள்ளமெலாம் சொக்கி நின்றேன்!
சேலையெனும் இதழுரிந்து
சிறைவண்டு நறையுண்டு சென்ற பின்னர்
மாலையிலே மடிந்தனவல்
லாலெனது மனமறிந்து பழகக் காணேன்!

பனிமழையின் சிறுதுளிகள்
பட,உலகம் மிகக் களிக்கப் பசும்பொன் பந்தாய்
இனிமை நிலா முழுமை நிலா
எழுந்ததடா என்னுள்ளத்தில், இன்பம் பொங்கி
கனியவரும் அதனுருவி;
களங்கமிக இருந்தாலும் காதலித் தேன்!
அநியாயம்! என்னுடனே
அன்புசெயநிலவுக்கு அறிவே இல்லை!

தூசியின்றித் தெளிந் தோடும்
துறையினிலே நான்மூழ்கத் தொட்ட தேதோ!
பாசியென நினைத்ததனைப்
பறித்தெறிய கையாலே பற்றினேனா?
கூசியங்கு எதிர்த் துறையில்
குளித்த இளங் குமரி எந்தன் கூந்தல் என்றாள்!
ஆசையொடும் நான் பார்த்தேன்
அவளுமெனை நோக்கி நகை அரும்ப நின்றாள்!

காற்றிடையில் குடமேந்திக்
கனியிதழில் கள்ளேந்திக் கண்கள் என்று
கூற்றிரண்டை ஏந்தியிளங்
கொங்கையென நுங்கிரண்டைக் கொடியில் ஏந்தி
ஆற்றோடும் அலைந்தென்னை
அணைந்த கருங்குழலாட அழகுத் திங்கள்
தோற்றோடும் வதனத்தில்
தொடர்ந்தோடும் நகையோடும் தோன்றி னாளை…

கண்ணிமைத்தேன் தலைகவிழ்ந்தாள்
‘கனஅழகுநீ’ என்றேன் கண்ணிரண்டை
மண்ணிடையே புதைத்துவிட்டு
மலர்ப்பதத்தால் தேடுகிறாள் மாயக்காரி!
எண்ணமினி நீயென்றேன்-
எனதுயிர் நீர்என்வாழ்வில் சோதி யூட்டும்
வண்ண விளக் கெனச் செவியில்
வார்த்துவிட்டாள்அமுதத்தை வாழ்க: வாழ்க!

இன்பத்தீ பாவளிநாள்
இன்றெனது வாழ்வினிலே இனிய நன்நாள்!
அன்புத்தீ பரவியிந்த
அகிலமெல்லாம் மகிழ்வெய்தும் அருமை நாளே!
என் வாழ்வின் சோதியினை
ஏற்றி வைத்தாய் இதற்காக எழு பிறப்பும்
உன்திரு நாள் கொண்டாடி
உளமுருகிப் பாடிடுவேன் உண்மையீது!

அன்பெனுமச் செழுங்கழனி
அதில்முளைத்த ஒரு கவிதை அழகு கண்டீர்!
துன்பமெல்லாம் துடைத்தன்புச்
சோதியிலே கலக்கவென்று துடிக்கும் எந்தன்
நண்பர்களே! கேட்டீரா
நானுரைத்த இவைகளிலே நயமிருப்பின்
என்வாழ்வின் சோதியினை
எதுவென்று நீரறிவர்! எதற்கு மேலும்?

போகிறேன் என்றோ சொன்னாய்?

மண்ணிடை இரவுக் கன்னியின் ஆட்சி
இன்னும் தேயவில்லை - இளம்
தென்னையின் ஓலை பண்ணிய இன்பப்
பாட்டுக்கள் ஓயவில்லை
என்கடை வாயில் உன்னிதழ் ஊட்டிய
ஈரம் காயவில்லை – எழில்
மின்னிடும் என்றன் மென்முலை தானும்
பின்னே சாயவிலை!

குறுமணல் மீது கொண்டல் தவழ்ந்த
சுவடும் மாறவிலை – அங்கு
புறவுகள் வந்து குறுநடை கொண்டு
கோலம் கீறவிலை
இரவின் ‘அம்மிக் குருவி’கள் இன்னும்
இல்லம் சேரவிலை – என்னை
இடைவெளி யின்றி இறுக அணைத்த
இதமும் தூரவில்லை!

பருவப் பெண்ணாம் இரவுக் கன்னி
தவறிப் பெற்றபயல் - அந்தப்
பரிதிக் குஞ்சைக் ககனத் தெருவின்
முடிவில் போட, அவன்
உருவப் பொலிவின் உதயத் தொளியில்
உறவை வெட்டுகிறாய் - பொல்லா
உதிரக் கடலின் நடுவில் படகில்
நடையைக் கட்டுகிறாய்!

“விண்ணின் தாரை எண்ணிப் பொழுதை
வீணாக் கிடவல்ல – அணு
விஞ்ஞா னிகள்போல் மண்மேல் உயிர்கள்
நீறாக் கிடவல்ல!
உண்ணீர் என்றே மீன்கொடு வந்திவ்
வுண்ணா உலகத்தின் - பசி
ஓட்டப் போகின் றேனென் றோசொன்னாய்”
என் உயிரத்தான்!

வேம்புக் குமரி தென்றல் காற்றின்
வெறியைச் சாடுகிறாள் - அந்த
வீம்புக் காரன் விரகப் பேயோ
டவளைக் கூடுகிறான்!
தேம்பிக் கொண்டே ஆடையை அள்ளி
மார்பை மூடுகிறாள் - உன்னைத்
தேடித் தேடி ஆழிக் கரையில்
ஒருபெண் வாடுகிறாள்!

குமையும் குயில்

தோடம் பழச்சுளைபோல் தொங்கும் நிலவொளியில்,
ஆட வருவாயென்று, ஆற்றோரம்
ஓடத்தே
நான்காத் திருந்தேன் நடுச்சாம மாகுமட்டும்,
ஏன்காக்க வைத்தாய் எனை?

எண்ணத்தில் எல்லாம் எலுமிச்சைப் பூச்சிரிப்பே
கண்ணிறையக் காணுவதுன் கட்டழகே,
எண்ணில்லா
வெள்ளிகளின் மத்தியிலே, வீற்றிருக்கும் வெண்ணிலவை
எள்ளி நகைக்கும் எழில்.

வெண்டா மரைக்குள்ளே வீழ்ந்துருளும் நீலநிற
வண்டாய், விழியாலிவ் வானத்தைக்
கண்டாலே
என்னை நினைக்கா திருக்க இசைவாயோ?
என்னே இதயம் இரும்பு!

தக்காளிக் கன்னங்கள் மிக்க சிவப்பேறப்
பக்கத் திருந்திசை நீ பாடுங்கால்…
துக்கமுற்று
சித்தம் குழம்பிச் செயலிழந்து மாமரத்தின்
கொத்துள் குமையும் குயில்!

வசந்தம்

பச்சையான இலைகளில் பொன்முலாம்
பாவ, ஊரின் பசும்புல் வெளியெலாம் ,
பச்சைப் பாலகன் போலப், பகற்பயல்
பாய்ந்த வெண்பனிப் பந்தடித் தென்னுடை
குச்சியுள்ளும் குறும்பு புரிந்தனன்.
கோபித் தென்பயன் இந்தப் பழங்கிழம்!
‘அச்சாடா’ வென அந்தக் குறும்பனின்
அதர மீதிலோர் முத்தம் அளிக்கிறேன்.

சன்னலைத் திறந்தேன், நெடுங்காலமாய்ச்
சாவை வெல்லத் தொடரும் நெடுவழி
அன்ன சாலை யருகொடும் வேலிமேல்
அந்த ரத்தினில், தந்தி சொல் கம்பிகள்
தொன்மை வாய்ந்தோர் பட்டினம் நோக்கியே
தொடுக்கப் பட்டுள தாம்அவை! என்கிறார்!
என்னவோ இன்பப் போதையிக் காலையில்!
எங்கிருந்திப் புதூஒளி பொங்குது!

வம்மி தோறும் வயிரம் வயங்குது
வாகைக் கொம்பரில் மாணிக்கக் கொந்துகள்,
செம்மை குள்முருங் கீன்ற பவழங்கள்!
செல்வ மாங்கிளை முத்தம் சொரிந்திடும்.
எம்மருங்கு திரும்பினும் பச்சையில்
இடையிடை எழில் புன்னகைத் தேமலர்,
அம்மம் மா! என்ன அற்புதம்! ஊரெலாம்
அழகி யுன்றன் திருமணப் பந்தல்கள்!

பந்தல் தோறும், குயில்வித்து வான்களின்
பண்த தும்புசங் கீத விருந்துகள்!
குந்திக் காக்கை குரவை யிடும், மரங்
கொத்தி, தாளங்கள் கொட்டிக் குதிக்கிறார்!
வந்து சேர்ந்தனர் நாட்டியத் தோகையர்,
வயல் அரங்குதொ றும்புது நாட்டியம்!
இந்த வையம் அனைத்தும் இருந்தன
தினிய நண்பர்கள் யாவரும் வந்தனர்.

வேனிலே, மண வேளை நெருங்குது,
வேதியர் அணில், வேதம் மொழிகிறார்
கானி லெங்குமுன் காதலை வாழ்த்தியே
கவிதை பாடுகின்றார் கவிவாணர்கள்!
வானில், வண்ண இறக்கை புனைந்ததோ
வந்து கொண்டிருக்கின்றனர் காதலர்!
ஏனடீ இவ் வவசரம்….! நாங்களும்
இருக்க… நாணமில் லாது சிரிக்கிறாய்!

பொங்கல்

பச்சைக் களிமண் கொணர்ந்து பிசைந்து பதப்படுத்தி
அச்சிற் பதித்தது போல்நீவிர் செய்த அடுப்பினிலே
‘அச்சா’ என உங்கள் அத்தான்கள் மெச்சி அகப்பையிலும்
மிச்சம் விடாது சுவைக்கும் நறும்பொங்கல் மெத்தவுமே…

உண்டு வயிற்றை ஒருசாண் உயரத்திற்(கு) ஊதுவித்து
கண்டீர் மயக்கம், கவிதையின் இன்னொலி காதுபட
சண்டாள நித்திரை சார்ந்தாலும் சாரும்! சரிசரிஎன்
பொண்டாட்டி வைத்த பெரும்பொங்கல் பெற்றியைப் பேசுவமே

மண்ணிற் கிடந்து முழுமதி ஒன்றெம் மனைக்குள் எழும்
இந்நேரம் மட்டும் இணைந்து கிடந்த இவள் துயிலும்
எந்நேர மோபிரித் தேகி, இடைக்கிடை எய்தியங்கு
கண்சாடை ஒன்றில் கருத்தைப் புதைத்துக் களிக்கையிலே

ஆற்றில் என அன்னம் இறங்க
அதுகண்ட அல்லியின் தாள்
தோற்றோம் இவள்தன் துடியிடைக் கென்று துவண்டுவிழ
நேற்று வரையிலும் நிகழாத விந்தை நிகழ்ந்த தென்று
ஆற்றாத செந்தா மரைப் பெண்ணை வண்டு வந்(து) ஆற்றிடுமே.

ஆற்று மணலில் அடிமிதிப் பாள்அதை அங்குநிற்கும்
நூற்றுக் கதிகம் வயதாம் மருத நுனிக்கிளையில்
வீற்றிருக் கின்றஅக் கிள்ளைகள்கண்டு விஷமம் எங்கள்
தோற்றத்தை இந்தச் சிறுக்கிதன் காலில் துவைப்பதென்றே –

சண்டைக் கிழுக்க இவளும் தன் மூக்கால் சமாளிக்கலாம்
வெண்டைக்காய் போன்ற விரலேன் இதற்கு? வெடிகள் எங்கும்
சண்டித் தனமே புரியும் இதென்ன சபையறியாப்
பன்றிக் குலமோ சரிஒருநாள்தான் பறையட்டுமே.

கோலத்தின் நாப்பண் குடம்,அதன்மேலே குவிந்திருந்தால்
பாலூறு தெங்கின் பழந்தான்,அதிலெங்கள் பாவையர்கள்
மேலாடை மீறி மிதக்கும் இளமுலை மேன்மை, யதன்
பாலேது? மேலே பகர்தல் முழுதும் பழங்கதையே.

பாலுக்கும் இவள் பல்லுக்கும் முனம்
பகையோ தொடர் பழியோ?
வேலுக்கும் நெடு வாளுக்கும் அதன்
நினைவிற் பயம் இல்லையோ?
மேலுக்கும் இனும் மேலுக்கும் எழ
வெளியோ? குரல் எரியோ?
ஆளுக்கு இனி அடிதான் விழும்
அதனால் அவள் பிழையோ?

உழுபவர் மனதினில் கதிரது அசைகையில்
குதியொடு மகிழ்வது வழியும்
உலகினில்உறுபசி
விலகியே சிறுமைகள்
விடியலில் பனியென ஒழியும்
கலைமதி சிதறியே கனலிடை வழிகையில்
கதிரவன் முகஎழில் பொலியும்
பிழையிலை ஒரு தினம்
தொழுதிடல் முறையிதை
பெரியவர் மனமிதை அறியும்.
உழுபவர் குருதியில் பெயர்வது வியர்வெனும்
அரிசியின் அவியலாம் குழைவே!
அழுவதும் இலையினி, அருணனின் அருளிது
அதுவுமெம் நிலமகள் விளைவே

பலபல என அதோ விடியுது பறவைகள்
பகர்வதும் பகலவன் துதியே!
அழகிது கவிதையும் முடியுது துயில்பவர்
அவசர மிலை இனி எழுமே!

கதிர் பொறுக்குகின்றாள்

கதிர் பொறுக்குகின்றாள் - வயல்
காட்டிலே குனிந்து வள்ளி
கதிர் பொறுக்கு கின்றாள்!

விதிர் விதிர்க்க வெயிலில் நின்று
வினை முடிக்கு முழவர் கண்டு
சதிரெனக் களிக்க நன்று
சாய்ந்து சாய்ந்து முன் நடந்து….

கதிர் பொறுக்குகின்றாள் – வள்ளி
கதிர் பொறுக்குகின்றாள்!

புல்லறுத்து பாதமோ,
வெண் புறாவின் கால் எனச் சிவந்து,
நெல் சுமக்கு முழவர் நெஞ்சில்
நினைவு கோடி நிறைய நின்று….

கதிர் பொறுக்குகின்றாள் – வள்ளி
கதிர் பொறுக்குகின்றாள்!

சூடிரண்டையே சுமந்து
தூரெனும் இடை துவண்டு
ஆடுகின்ற தோகை கண்டு
அஞ்சி யோட அதனை வென்று…

கதிர் பொறுக்குகின்றாள் - வயல்
காட்டிலே குனிந்து வள்ளி
கதிர் பொறுக்கு கின்றாள்!

பொன்னி வயற்புறம் போவதேன்

கன்னி எழிலொடு தன்னந் தனிமையிற்
பொன்னி வயற்புறம் போவதேன்? – எங்கள்
பொன்னி வயற்புறம் போவதேன்? – அவள்
கண்ணை இமைப்பது கண்டு குளத்திடை
காவி மலர்க்குலம் சாவதேன் - அந்தக்
காவி மலர்க்குலம் சாவதேன்!

நஞ்சை விளைப்பவன் நாட்டின் பெருந் திரு
நெஞ்சை அரிந்து துண் டாடவோ! – கொண்டு
கஞ்சி கொடுத்தபின் காற்றை மறித்தவர்
கொஞ்சி மகிழ்ந்து கொண்டாடவோ?

கன்னி…

முற்றி விளைந்த நெல் பற்றைக்கு நாணத்தை
கற்றுக் கொடுத்தபின் மீளவோ? – கரு
விற்புரு வத்தினில் அற்புதம் செய்தவன்
அன்பு மனத்தினை ஆளவோ……..?

கன்னி…

இப்படிச் சூட்டை இயற்றுக என்றிரு
செப்பு முலைகளைக் காட்டவோ! - இல்லை
“எப்படி என்முகம்?”என்றுசெந் தாமரைக்
குப்பையை அங்கிருந்தோட்டவோ….?

கன்னி…

உச்சி வெயிலினைத்துச்சமென் றெண்ணி
உழைத்த வரைப் புயம் சாயவோ? – காதல்
இச்சை எழுப்பி இதழ்கடை ஊறிய
இன்ப அமுதினை ஈயவோ…..?

கன்னி…

பாய்விரித்து வையுங்கள்

பறையின்மகள் தூங்குகிற
அறைக்கதவை நள்ளிரவில்
பதுங்கிச் சென்று
குறைமதியால் மதுவெறியால்
தட்டுகிற கோமான்காள்
கொஞ்சம் நில்லீர்!
நிறையுடையாள் பொன்றாத
கற்பெனும் நிதியுடையாள்
நெஞ்சை ஈர்த்தால்
முறையாக மணப்பதிலே
வசையென்ன? ஏறிடுமோ
முதுகில் மேளம்!

முடிச்சவிழ்க்கப் போம்பொழுதும்
முதலாளி போலுடலை
முறையாய் மூடி
நடித்துலகை ஏய்ப்பதற்கும்
நாகரிக உடைவேண்டும்!
அவற்றைக் கல்லில்
அடித்தும்மை அழகுசெய்யும்
அந்த “வண்ணத்” தோழனுங்கள்
அருகில் வந்தால்
துடிக்கின்றீர் ஏனையா?
சொல்லுங்கள் தொங்கிடுமோ
தோளில் மூட்டை!

குரங்குக்கும் உங்களுக்கும்
கொஞ்சமெனும் உறவில்லை?
குறித்துக் காட்ட
சிரங்கொட்டும் நும்தலையில்
சீழ்கொட்டும் போதுமதைச்
சிங்கா ரிக்க
கரந்தொட்டே கத்தியினால்
“கருக்” கென்று மயிர்சீவிக்
காட்டு வாழ்வுக் (கு)
இரங்குகின்ற “அம்” பட்டன்
ஈனனென்று செப்புகிறீர்
இதுவோ நீதி?

களிப்புக்கும் உள்ளாழ்ந்த
கவலைக்கும் மருந்தென்று
கலத்தை நீட்டி
புளிப்புக்கும் இனிப்புக்கும்
போராட்டம் போடுகிறீர்
பொழுது பட்டால்!
சுளிக்கின்றீர் ஏதோதோ
சுடுசொற்கள் வீசுகிறீர்
சொந்த நண்பன்
குளிக்கவரின் பொதுக்கிணற்றில்
"பள்”ளென்று கூவுவதோ
கொடுமை ராசா!

கோயிலையும் ஹோட்டலையும்
“கொள்கையெனப் பேசிடுவோர்
கூடிச் சென்று
வாயிலினைத் திறப்பதினால்
வந்திடுமோ ஒன்றுகுலம்?
வளர்ந்து விட்ட
நோயிதனை நொருக்கிவிட
நோக்குடையீர் எனிலுங்கள்
நொண்டி நெஞ்சில்
பாய்விரித்து வையுங்கள்
பகுத்தறிவு நல்லெண்ணம்படுத்துத் தூங்க!

காக்கைகள்

காக்கைநாம், கரிய
காக்கைகள் பெரிய
நோக்கமற்ற சிறு காக்கைகள்!
கருங்காக்கைகள்!

கறுப்புத் துணியைக் காட்டி,
அரு வருக்கத் தகுந்த தெங்கள்
இறக்கையென் றுணர்த்தியும்
எட்டத் துரத்திவிடும் விருப்பத்தில்
சிலர்செய்யும் விஷமத் தனத்துக்கும்
இரங்குவோம்! உணவருந்துவோம்!
பின் பறந்துபோம்….

காக்கைநாம், கரிய
காக்கைகள் பெரிய
நோக்கமற்ற சிறு காக்கைகள்!
கருங்காக்கைகள்!

உலகத்தின் அழுக்குண்டெம்
உடல்கொண்ட ஊத்தையை
அலசி அலசி நன்கு
கழுவிக் குளித்த பின்னர்
அலகில் உணவு கொண்டுள்
அறையுள் புகுந்துமக்கள்
அணைப்பினில், அன்பின் பிணைப்பினில்
இன்பம் சுகித்திடும்….

காக்கை நாம், கரிய
காக்கைகள் பெரிய
நோக்கமற்ற சிறு காக்கைகள்! –
கருங்காக்கைகள்!

அழுக்கைத்தவிர வையத்
தழகை விழுங்குதற்குப்
பழக்கப் படாதவர் ஐயநாம் அதற்காக
இழக்கமாய்ப் பழித்தெம்மை
ஏசித் துரத்தல்விட்டு
வழங்குவீர்!அன்பை! விளங்குவீர்!
நன்றி மறந்திடாக்…

காக்கைநாம், கரிய
காக்கைகள் பெரிய
நோக்கமற்ற சிறு காக்கைகள்!
கருங்காக்கைகள்!

உணவிட்டு எமையிட்டும்
உருகி இரங்குகிற
மனிதத்தின் உயரிய
குணம்பற்றிப் பயன்பற்றி
மனமொத்தெம் இனமொன்றி
மகிழ்ச்சிக் கவியிசைத்தல்
இன ஒற்று மைக்குமட்டும் - இலை,
அன்பின் நினைவுக்கும்…

காக்கைநாம் கரிய
காக்கைகள் பெரிய
நோக்கமற்ற சிறு காக்கைகள்!
கருங்காக்கைகள்!

வேனில்

ஆண்டில் ஒருமுறை எம்
மாண்ட பிதிர்கடனை
வேண்ட வரும் குருக்கள் போலே
கிளை
நீண்டு வளர்ந்து பச்சை
பூண்டு புதுத்தளிர்கள்
தோன்றும் மரங்களுக்கு மேலே
உயர்
பாண்டி மாநகர்
தோண்டி எடுத்த தமிழ்
ஈண்டு குயிலிரைக்கும், தேனே!
அது
தீண்ட எனதுளமும்
தாண்டும் கவலைகளை
மீண்டும் கவிதைவெறி யானேன்!

முள்ளு முருக்கில் எரி
கொள்ளி நெருப்புதிர்ந்து
தள்ளி கிடக்குமோர்மாந் தோப்பை
வான்
வெள்ளி குலைகுலையாய்
அள்ளி எறிந்தது போல்
கொள்ளை கொளுத்துது மத் தாப்பை!
புள்ளும் குருவிகளும்
உள்ளம் கனிந்த காதல்
வெள்ளம் தனில் குடைந்தே ஆடும்!
புதுக்
கள்ளில் எழும் “தெறி” போல்
துள்ளும் சுவைக்கவிதை
சொல்லி வசந்த மிதைப் பாடும்!

செல்வம் படைத்தவர்க்கே
ஒல்கும் பணிவிதென்று
நெல்லின் கதிர்கள்தலை தாழ்த்தும்
மிக
மெல்ல நடந்துவரும்
செல்வக் குழந்தை இளம்
தென்றல் அவைநிலத்தில் வீழ்த்தும்!
சுவை
வெல்லத் தமிழ் கதைத்து
செல்லும் கிளிக்குலமும்
வேனில் விளங்கவென வாழ்த்தும்
இதை
நல்லகவிதை யொன்று
சொல்லும் படிக்கெனை எந்
நாளும் கனவிடையே ஆழ்த்தும்!

சன்னல் அருகுநின்று
என்னே அழகிதென்று
கண்ணைப் பிசைந்து கொண்டு பார்த்தால்
அவள்
என்னோ டெழுந்து வந்தென்
முன்னால் அணைந்து நின்று
தன்மேல் எனதுடலைப் போர்த்தாள்
எழில்
மின்னும் வசந்தமன்பு
பண்ண இயற்கை தந்த
வன்னப் பொழு தெனவே சாய்ந்தாள்
அவள்
கன்னம் சிவக்க இதழ்
தன்னைப் பதிக்கையிலே
விண் ஏன் இடையில் வந்து பாய்ந்தாள்?

அத்தான்

பொலியும் கலைமதியின் பெயரால் தனையறியார்
நலியும் மதி ஒளியில் நலமேதடி கண்டார்?
எலியின் உருவதிலும் எழில் காண் பவர் விழிகள்
மெலியும் நமதுடலை மேவா ததுமேனோ?

வாடும் கரமென்றே வளைசெய் ஒலிகேளா
தோடும் முகிலிடையே ஒழுகுங் கவியெனவே
தேடும் அவர் விழிகள்! தெரியா நமதுருவம்!
கூடும் தினமெண்ணிக் குலையா திருமனமே!

கோவைக் கவிதன்னைக் கொத்தும் கிளிகண்டே
நாவை நதியாக்கி நாவாய் விடுகின்றார்.
காவிற் கலைமானிற் காணும் நவமிந்தப்
பாவைக் கிலையென்றோ பாரா முகமானார்?

கடல்நா டிடு நதியின் கதையைக் கவிசெய்வார்
உடலோ டுயிர்மாய உளமே யவர்நினைவாய்
மடல்காய்ந் திடுதாழை மலரா யொருமங்கை
நடமா டுவதறியார் நமனா யினரவரே!

கண்ணிற் கருவண்டைக் காணார் மலர்மதுவை
உண்ணும் அவை கண்டால் உளமீந் திடுகின்றார்
எண்ணச் சுடுகாட்டில் எய்தும் சுகமிந்தப்
பெண்ணுக் கிலையென்றோ பேசாச் சிலையானார்!

கொத்தாய் மலர்சூடிக் குறையா அழகோடு
நித்தம் அவர் நினைவாய் நிற்கும் நமைவிட்டே
கத்தும் குயிலிசையிற் கவிதைக் கருதேடும்
அத்தா னொருபித்தன்! அழியா திருமனமே!

மட்டக்களப்பு மாநகர்

இலங்கையின் திருமுகம், இலட்சியத் தமிழகம்
எழில்தவழ் மட்டு மாநகர் வாழ்க!
வளம்பல கொழிக்கும் வாவியில், மீன்கள்
முழங்கிடும் இசையும் தமிழும் வாழ்க!

விபுலா னந்தன் வழங்கிய யாழாய்
விளங்கிடும் வங்கக் கடலொடும், வாவி
நவரச ஏழிசை நரம்பெனப் பொருந்தும்!
நாளும் உதயச் செங்கதிர் வணங்கும்!....

இலங்கையின் திருமுகம்…..

வயல்களில் பொலிமலை! ஆழியில் மீன்கள்!
வளர்செழுந் தெங்கும் உதிர்வதுந் தங்கம்!
அயல்விருந் தோம்பும் அன்பினில் அன்னை!
அரைசியல் பல்கலை அறிஞர்க்கும் அம்மை!.....

இலங்கையின் திருமுகம்….

சோதிடம், மருந்து, மந்திரம், கூத்து,
சுவைக்கவி, வசந்தன் குரவையும் ஏத்தும்,
சாதிகள் நான்கும் தம்மதம் காத்து,
சமத்துவம் கண்ட தாயகம் வாழ்க!....

இலங்கையின் திருமுகம்….

மழை பொழிந்தது

மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!
மலையிருந்து பல் நதி விரைந்திட,
மரஞ்செடி கொடி மகிழ்ந்து கும்பிட

மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!

கருணை வானக் கரம் வழங்கிய
கனிந்த நாவற் பழஞ் சொரிந்தென,
பரந்த பூமிச் சருகதிர்ந்திடப்
படபடபட சடசடவென…

மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!

தாளங் கொட்டித், தவளைத் தட்டார்
தங்க மின்கொடித் தாலி செய்திட,
ஆழமான குளம் வழிந்திட,
அடியடியென விடியவிடிய….

மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!

கலையிழந்து தம் கணவர் நெஞ்சிடை
காதல் வஞ்சியர் கூதல் அஞ்சிட,
மலை பிளந்தென இடிமுழங்கிட,
மை யிருளிடை பொய்யெனப் பெரு….

மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!

இடரெனும் புவிக் கடலில், உண்மை யென்
இரவி யள்ளிய கருமுகில் மனத்
திடைப் புகுந் துணர் வறுத்த செந்தமிழ்
உடைப் பெடுத்தொரு படைப் புதித்தென

மழை பொழிந்தது, மழை பொழிந்தது!
மண் மடந்தையின் மனங் கசிந்தது!

(வழி" தொகுதியிலிருந்து...)

மின்னல்

கண்ணைத் தின்னும் மின்னல்! –
நெஞ்சைக்
கருக்கி உருக்கும் மின்னல்!
மண்ணை யறைந்து குதித்தே
பாம்பாய்
மடியும் நெளியும் மின்னல்!

சளசள எனமழை
பொழிகிற பொழுதினில்
ஒழுகிற குடிசையில்
உழல்கிற வறியவர்…..

கண்ணைத் தின்னும் மின்னல்
நெஞ்சைக்
கருக்கி உருக்கும் மின்னல்!

கயமைகள், கசடுகள்
கதியென அலைகிற
கயவரை இறையவர்
கடிகிற நகைபுரை

கண்ணைத் தின்னும் மின்னல்
நெஞ்சைக்
கருக்கி உருக்கும் மின்னல்!

அருள்தவிர் கொடியவர்,
அடிமன இருளிடை
அறிவெனும் ஒருகசை
அடிவிழல் எனவதோ….

கண்ணைத் தின்னும் மின்னல்
நெஞ்சைக்
கருக்கி உருக்கும் மின்னல்!
விண்ணில் தங்க நதியாய்ப்
பாய்ந்து
விரையும், மறையும் மின்னல்!

ஒட்டுறவு - சிறுகதை

‘நான் ரெண்டு மாசத்துக்கு முந்தியே சொல்லிப் போட்டன். கணக்கு முடியவந்து கூட்டித்துப் போயிருவன் எண்டு! பெட்டேய் அரியம்.. என்ன செய்யிறாய்? ஐயாட்ட அம்மாட்டச் சொல்லிப் போட்டு… கெதியா வெளிக்கிடு பாப்பம். இருட்ட முந்தி போய்ச்சேர வேணும்!’

என்றோ ஒரு நாள் சவடால்ற சாமித் தம்பி வந்து இப்படித் தான் செய்யப் போகிறான் என்பது ஏலவே தெரிந்த விஷயந்தான்! அது நடக்கப் போகிறது.

‘கௌரி.. இஞ்ச பாருங்க… அச்சாக் கௌரி! கண்ணக் காட்டுங்க.. இஞ்சப் பாருங்கவன் அக்கா… ஐயா.. ஐயா.. ஓடி வாருங்கவன். கௌரிக் குஞ்சு வடிவு காட்டுங்க… கோவங் காட்டுங்க.. கௌரி டாட்டா காட்டுங்க… ஆ…ஆ.. காட்டுங்க. வணக்கம் சொல்லுங்க.. சாமியக் கும்பிடுங்க… அரோகரா.. அப்பிடித்தான்.. நல்ல பிள்ள… அச்சாப் பிள்ள… முத்தல் பிள்ள…’

தகப்பனுடைய அதட்டலைக் கேட்டு குழந்தையை விறாந்தையில் விட்டு விட்டு அறைக்குள்ளே நுழைந்து ஊருக்குப் போக ஆயத்தமாகும் அரியத்தைப் பார்க்க வாய்விட்டு அழவேண்டும் போல இருக்கிறது.

அரியத்தைப் பெற்ற அப்பன் சவடால்ற சாமித்தம்பியை எனக்குப் பிடிக்காது. வருமானவரிப் பத்திரம் போல நேரம் காலமில்லாமல் அடிக்கடி வந்து நிற்கும் அவன் வரும் போதெல்லாம் ஏதாவதொரு சோக வரலாற்றோடு தான் வருவான். ஒரு நாளாவது ஒரு நல்ல சேதியோடு அவன் வந்ததில்லை.!

‘ஐயா கூரை எல்லாம் ஒழுகிச் சுவரும் கரையுது. எங்க விழுந்து தொலைஞ்சிருமோ எண்டு விடிய விடிய நித்திரையும் இல்ல. பெரிய அவதி.. ஐயா குந்தி இருக்கிற குடிலும் விழுந்து போச்செண்டால் குமரும் குட்டிகளுமாக எங்க போவன்… அதுதான் வந்த நான். ஒரு நாலுமாதக் காசு வேணும். அதுவும் காணாது! கிடுகு கட்ட வேணும் மாரி மழ காலம்… எனக்கும் பிளைப்புக் கிடைக்குதில்ல… பாத்துக் கழிச்சுக்கலாம்… உதவி செய்யுங்க ஐயா….’

‘ஒரேயொரு ஆம்பிளப் புள்ள. ஆறு பெட்டயளுக்குப் பிறகு ஆண்டவன் தந்தது. தோஷம் பிடிச்சுத் தளரா வியாதியாக் கிடந்தது. அதிர சீவன் ராவு முடிஞ்சு போச்சையா… சவம் அடக்கம் பண்ண வேணும்… என்னவெண்டாலும் பாத்துச் செய்யுங்க…’

‘மூணாம் பெட்டையும் ராவு சமைஞ்சு போனாள். அவளுக்குத் தண்ணி வாக்க வேணும். சதக் காசும் கையில கிடையாது. ஒரு இருபத்தைஞ்சு வேணுமய்யா.. பிறகு பாத்துக்கலாம். வீட்ட வெத்தில பாக்குக்கும் வழியில்ல…’

இப்படி எத்தனை எத்தனை! சாமித்தம்பிக்கு மாதத்தில் இரண்டு மூன்று விபத்துக்கள் குறையாது! தேவைகள் திருப்திகள் விபத்துக்கள் யாவும் உழைப்பவர்களுக்கு மட்டுந்தானா? அவை சவடால்ற சாமித் தம்பிக்கும் இருக்கத்தான் செய்தன.

‘ஐயா கதிர்காமம் போய் வரப் போறன்… காசு வேணும்! நான் சாகக் கிடந்த நேரத்தில வச்ச நேர்த்திக் கடன்… கட்டாயம் போக வேணும்!”

சாமித்தம்பியின் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது. பொறுத்துக் கொண்டு ‘நீ கதிர்காமம் போகத்தான் வேணும் ஆனால் ஒரு பெட்டைக் குட்டி பாடுபட்ட பணத்தில் அல்ல. உன்னுடைய சொந்த உழைப்பில் போக வேணும். உதவாக்கரை உலக்கை! நீயும் ஒரு தகப்பனா?’

‘சோறு வேணும். வேட்டி வேணும். கூரைக்கு ஓலை வேணும். சாச் செலவும் சமைஞ்ச செலவும் வேணும்! சிவ மூலியும் வேணும்! கடைசியாக நீ கதிர்காம யாத்திரையும் போக வேணும்! இதற்கெல்லாம் நீ உழைக்க வேணும்!’

‘து}…! உனக்கு வெட்கமாக இல்லை? ஒரு பெட்டைக் குட்டியின் உழைப்பிலே… உன்னுடைய தேவைகளும் திருப்திகளும்… உதவாக்கரை… கேடு கெட்டவன்!’

‘ஒரு பெண் குழந்தை எத்தனைக்கென்று உனக்கு உழைத்துப் போடுவாள். இன்னும் எத்தனை காலத்திற்கு நீ அவளைக் கொண்டு உழைக்கலாம். நாளைக்கோ இன்றைக்கோ அவளும் பெரியவளாகி… வீட்டோடு வந்து குந்தி விட்டால்.. “நாலாம் பெட்டையும் சமைஞ்சு போச்சு” என்று யாரிடம் போய் ஒப்பாரி வைப்பாய்? நீ கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவன்! பிள்ளைகளை பாடுபட்டுழைத்துக் காப்பாற்றத்தான் முடியவில்லை! அந்தப் பெட்டைக்குட்டியின் உழைப்பிலே… கஞ்சாவும் புகைத்துக் கொண்டு கதிர்காம யாத்திரையும் போக வேண்டும். சீ!’ வாயைத் திறந்து இப்படியெல்லாம் பேசிவிட்டால் அவ்வளவு தான் சங்கதி. சாமித்தம்பி துண்டை உதறிப் போட்டுக் கொண்டு “அரியம் புறப்படு” என்று மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டால்..? நான் ஒரு மாத முன் பணம் கொடுக்காவிட்டால் என்ன? இன்னொருவனைத் தேடிப் போய் ஆறுமாத முன்பணம் வாங்கவும் அவனால் முடியாதா என்ன? அரியம் போய்விட்டால்…. பழையபடி காவடி எடுக்க யாரால் முடியும்!

மனைவியும் நானும் அரசாங்க ஊழியம். அந்தப் பெரும் பேற்றினை அனுபவித்து பென்ஷன் என்ற ஜீவன் முத்தியடையும் வரை அரியம் போன்றவர்களை இழப்பது சாமான்யமான இழப்பா?

கடைசிக் குழந்தை உரித்த கோழிக் குஞ்சுபோல ஏழு மாதத்திலே உலகைக் காணத் துடித்துப் பிறந்து விட்ட முற்றல்! ஏழு மாதத்தையான் குஞ்சு கௌரிக்குத் துணையாக வந்தவள் தான் இந்த அரியம் என்ற அரியமலர்! ஒன்றரை வருடத்தில்… கௌரி குறைமாதக் குழந்தை போலவா இருக்கிறாள்!

‘ஆயோம்….! ஆயோம்….? ....!’

தாயின் மடியை விட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு அரியத்திடம் ஓடிப் போகத் திமிறுகிறாள் கௌரி.

அரியம் புறப்படுகிறாள். தன்னுடைய உடைகளையெடுத்து கடதாசியில் சுற்றி வைத்து விட்டாள். தலையை வாரி பவுடரும் பூசியாயிற்று. கடைசியாக வாங்கிக் கொடுத்திருந்த அந்தப் புதிய சட்டையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன யோசிக்கிறாள்?

‘போட்டுக் கொள் உன்னுடைய சட்டை தானே!’

‘ஆயோம்… ஊக்கு ஆயோம்…!’

‘அரியம் ஊருக்குப் போகப் போறாள்… அவங்கட அப்பா அவளக் கூட்டிப் போகப் போறார். அரியம் இனி இல்ல. கௌரி அச்சாப் பிள்ள … அழக் கூடாது.’ குழந்தையைச் சமாதானம் செய்யும் மனைவியின் விழிகள் கௌரியை முகம் கழுவுவானேன்…!

‘அவளைக் கூட்டிக் கொண்டு போய் பட்டினி போட்டுக் கொல்லப் போறாய்.. என்ன?’

‘ஏனம்மா கொல்ல…? அதுகள் வயலுக்க போகும்.. கதிர் கப்பியைப் பொறுக்கும். கொண்டு வாறது தாராளமாகக் காணும். என்ட மனுஷியும் குமர்களும் வயல் வெளிய கிடந்து வாற நேரம்.. என்னவும் காச்சி வைக்க வேணும். எனக்கு அதுக்கும் ஏலாது…! இவள் பெட்ட வீட்டில நிண்டாள் எண்டால் அதுகளுக்கும் ஆறுதல்.. எனக்கும் நல்லம்.’

‘மூத்த பெட்டையிர புருஷனும் பேசுறான். அவன் கார் மெக்கானிக்கர். நல்ல உழைப்பாளி. வயது வந்த பிள்ளைய வீட்டு வேலைக்கும் விடுவானா ஒரு அப்பன்? எண்டு கேக்கான். அவன்ட பெண்டாட்டி அதுதான் எண்ட மூத்த மகள்.. அதுவும் ஒரே நோய்க்குடுகு! அவள் பெட்டைக்கும் உதவிக்கு ஆள் வேணும். நான் என்னம்மா செய்ய? ஒண்ணர வரிஷமாகுது… காணாதா?’

‘எனக்கு லீவு விட்டபிறகு நீ போனால் என்ன? இப்பவே போகப் போறியாடி அரியம்? இன்னும் ஐந்து நாள் பொறுத்துப் போக முடியாதா உனக்கு?’

வீட்டுக்காரியின்.. அதுதான் அரசாங்க ஊழியம் பார்க்கும் என் சகதர்மினியின் கேள்விகள் எதுவும் அரியத்திற்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அந்தக் கேள்விகள் தனக்குக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. எங்கே தனது விடுதலை தாமதமாகி விடுமோ! பயம்…பரபரப்பு..!

ஆறு மாசங்களுக்குப் பிறகு…

நாளைக்கு.. தன் சிநேகிதிகளோடு புட்டி ஆற்றில் அரியம் நீந்தி நீந்திக் குளித்து விளையாடப் போகிறாள்!

சுழியோடி வந்து தண்ணீரில் நிமிர்ந்து நிற்கும் மலராத தாமரை மொட்டுகளை நிமிண்டி கசக்கி அழகு பார்க்கும் காவாலிப் பையன்களோடு, ஆபாசமாகத் திட்டிச் சண்டை பிடித்துக் கொண்டே, அரியமும் அவள் சிநேகிதிகளும் சந்தோஷமாகக் குளிப்பார்கள்! பிள்ளையார் கோவில் பின்புறம் வம்மி மரத் திரையில் மறைந்து, குளிக்கும் போது அணிந்திருந்த ஈரச்சட்டையைக் கழற்றிப் பிழிந்து விட்டு மீண்டும் ஈரத்தோடு அதனையே அணிந்து கொண்டு தலையை விரித்து விட்டபடியே தண்ணீர்க் குடத்தோடு வீடு திரும்புவாள் அவள்.

‘துறையடியிலே தான் எவ்வளவு புதினங்கள்!’

‘பகலெல்லாம் சனங்கள் போறதும் வாறதும்.. பார்த்துக் கொண்டிருந்தாலே பசிக்காது. கூத்தும் கும்மாளமும்…. வெறியும்!’

‘மாரியம்மன் சடங்கும் வருகுது. கோவிலடியில… எவ்வளவு பிள்ளையள். நிலவில வயல் வெளியெல்லாம் விடிய விடிய விளையாட்டு! சோறில்லாட்டி என்ன? ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாளைக்குக் கிடையாதா என்ன? அம்ம மோட்டு வட்டைக்குள்ள மூணு மாத்தயான் கதிர் பொறுக்கி வந்து, பச்சையாக்குத்திச் சோறாக்கி, குறட்டை மீனும் திராயும் சுண்டி, எல்லாரும் வளைச்சிருந்து ஆவிபறக்கப் பறக்க என்ன ருசியான சோறு… அது’

‘அரியம்… போய்ச் சாப்பிடு… நீ இனி இங்கே நிற்கமாட்டாய்… அது தெரிகிறது போ… முதலில் சாப்பிடு…’

குசினிக்குள் நுழைந்தவள் சாப்பிடுவதாக ஒரு பாசாங்கு. அவசரமாக வெளியே வருகிறாள்?

‘ஆயோம்… ஊக்கு… ஆயோம்!’ கௌரி கைகளைச் சிறகு விரிக்க ஓடி வந்து அவளை வாங்கிக் கொள்கிறாள் அரியம். இனி உன்னை விடமாட்டேன் என்பது போல அவளுடைய கைகள் அரியத்தின் கழுத்தைக் கட்டிக் கொள்ள சிரித்தபடியே குழந்தையை நிமிர்த்தி மாறி மாறி கன்னங்களில் கொஞ்சுகிறாள். குழந்தை சிரிக்கிறாள். அந்த அழகான சிரிப்பு நெஞ்சைப் பிழிகிறது.

முதன்முறையாக அரியம் வீட்டுக்கு வந்த அன்று தனக்கும் படிக்கத் தெரியும் என்பதை வாசல் மணலில் எழுதினாளே சா. அரியமலர் என்று. அவளுடைய பற்களைப் போலவே வரிசை பிசகாத அழகான கையெழுத்து. மூன்றாம் தரம் வேறு. அவளுடைய புத்திக் கூர்மை வேறு தான்.

ஓரிரு நாட்கள் போல இருக்கிறது. ஒன்றரை வருடங்கள் கௌரி அவளோடு ஒட்டிக் கொண்டாள். வேறு வழி?

குழந்தையின் அலுவல்கள்.. இரவில் தாயோடு உறங்குவது தவிர அனைத்தையும் அரியமே கவனித்தாள். பால் ஊட்டும் அவளே மருந்தையும் முறைப்படி ஊட்டுவாள். குளிப்பாட்டி அலங்கரிப்பாள். நானும் மனைவியும் உத்தியோகத்திற்கு கிளம்பிப் போய் திரும்பி வரும் வரை மட்டுமல்ல.. இரவு கௌரி து}ங்கும் வரை அவளுடைய காலில் படுத்து ஆடாவிட்டால் து}ங்க மாட்டாளே! குழந்தையின் முழுப்பொறுப்பையும் அரியமே ஏற்றுக் கொண்டாள். அத்தோடு..

ஏதோ சோறு சமைப்பாள்… கற்கள் கிடந்து விட்டால் கடவுளே என்பாள். உள்ளதைக் கொண்டு கறிகளும் சமாளிப்பாள். எங்களிடம் வரும் போது இவையெல்லாம் அவளுக்குப் புதிய பாடங்கள். பார்த்துப் படிக்க அவள் கெட்டிக்காரி.

இங்கு வரும் முன்பு அரியம் ஒரு டாக்டர் வீட்டில் இருந்தாள். எட்டு வயதிலேயே அவள் அங்கு போய்விட்டாள். குழந்தையைப் பராமரிக்கும் ஆயா ஒருத்திக்கு இவள் கையுதவிக்காக அமர்த்தப்பட்டாள். டாக்டர் ஐயாவும் மனைவியும் நல்லவர்கள் தான். இல்லாவிட்டால் இவளுக்கென்று தனியாகச் சாப்பாடு தயாரித்துக் கொள்ள இவளை அனுமதித்திருப்பார்களா! அவள் எங்களிடம் வரும் போது அவளுக்குப் பன்னிரண்டு வயது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அவள் மிகவும் குச்சியாக இளைத்திருந்தாள். சுருளான அவள் கூந்தல் மொட்டையாக வெட்டி விடப்பட்டிருந்தது.

அரியத்திற்கு எங்களைப் பிடித்துவிட்டது. எங்களுக்கும் அவளை அப்படியே. கட்டையாய் வெட்டியிருந்த தனது தலைமயிரை சர்வ சுதந்திரமாக நீளமாக வளர்க்க ஆரம்பித்தாள். அவளுடைய தலையிற் பேன்கள் என் மனையாளின் பொழுதுபோக்கு! கொஞ்சம் வாய் நீளம் என்பதைத் தவிர... கடைக்குப் போனாள். மா இடித்தாள். வாசல் பெருக்கினாள். விறகும் கொத்தினாள். சமைத்தாள். குழந்தையை வளர்த்தாள். வீடும் வாசலும் அழகாய் இருந்தன. மாவும் முருங்கையும் எலுமிச்சையும் காய்த்தவை காய்த்தபடி கணக்காய் இருந்தன.

அரியத்தைப் பற்றி அடுத்த வீட்டுக்காரர்கள் எங்களிடம் கூறும் முறைப்பாடுகள். அவர்கள் அது இது கேட்டுவரும் வேளைகளில் அரியம் நடந்து கொள்ளும் கண்டிப்பின் கசப்புகள் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் வீட்டிலிருக்கும் பொழுதில் கூட எங்களுக்கான பதிலை அவளே சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைப்பாள். அவளுடைய துடுக்கான பதிலை எனக்குப் பிடிக்காவிட்டால் என்ன? வீட்டுக்காரிக்கு அது பிடிக்கும். ஒரு ஈ காக்கை நெருங்க முடியாது.

சில வேளைகளில் எங்கள் மூத்த பெண்பிள்ளைகள் இரண்டையும் அரியம் அடித்துவிடுவாள். காரணம் கேட்டால் ஏதோ சொல்லிச் சமாளித்து அழுவாள். இந்த இடத்தில் மட்டும் அவள் கொஞ்சம் அதிகம் என்று மனைவி அதட்டுவாள். மகளுக்கு மேலும் இரண்டு மூன்று தாயிடமிருந்து கிடைக்கும். ‘ஒத்த வயதுப் பிள்ளைகள். எப்படியும் போகட்டும். அக்கா தங்கை சண்டை போட்டுக் கொள்வதில்லையா?’ என்று இரகசியமாக மனைவியைச் சமாளிப்பது… ஒரு மெல்லிய செருமல் செருமிக் கொள்வது அவ்வளவோடு நான் சரி..

அவளிடம் திருட்டுப் புத்தி ஒன்றுமே கிடையாது. ஒர் சிறு உணவுப் பண்டத்தைத் தானும் அவள் திருடியதாக இல்லை. வாசலைப் பெருக்கும் போது ஏதாவது சில்லறைகளைப் பொறுக்கினால் கூட என்னிடமோ மனைவியிடமோ கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.

யாராவது எங்களோடு தகராறுகளுக்கு வந்தால்… அரியம் அவர்களைச் சும்மா விடமாட்டாள். எல்லாம் அவளுக்குத் தெரியும்.

‘கிழடன்! அவர்ர ஒசிலப்பாரன்….! கறிச்சட்டிப் புறத்தி மாதிரி முகமும் ஆளும்! ஐயாவோட இவனுக்குச் சரியான எரிச்சல்! தாலிக் கொடிக் கள்ளன்! இவனைப் பொலிசில் குடுத்து இடிப்பிக்க வேணும்! கண்ணாடிப் புடையன்!’

வாய்க்கு வந்தபடி திட்டுவாள். காறாப்பித் துப்புவாள்! எட்டிப் பார்த்தால் தெருவிலே எங்களோடு வயல் வழக்காடிக் கொண்டிருக்கும். மனைவியின் உறவினர் போய்க் கொண்டிருப்பார். அவருக்கு கேட்காமல்தான் இது நடக்கும். நான் அதட்டிக் கூப்பிடும் வரையும் நடக்கும். இப்படிப் பலபேர் அரியத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள்.

‘இவளுக்கு இனிமேல் செண்ட நாள் செல்லாது பிள்ள. இண்டைக்கு நாளைக்குச் சமைஞ்சு போவாள் பெட்ட. ஆளப்பார்! திமுக்குத் திமுக்கெண்டு! குமருகள் மாதிரி நல்ல கொழுப்பு வச்சித்து. இவள்ற நெஞ்சையும் நெளிப்பையும் பாரன்.!?’

பக்கத்து வீட்டுக்காரி அரியத்தைப் பற்றி இப்படி சொன்னால்… நல்ல பரிசு கிடைக்கும்.

கிழவியைப் பார்த்து உதட்டை மடித்து ‘வவ்வவ்வே.. உனக்கென்ன கிழடி! நீ உன்ட வேலயப் பார்! அவக்கு கோப்பித்து}ள் குடுத்தாத்தான் நல்லம்… இல்லையெண்டால் எரிச்சல்!’

கிழவிக்கு அசடு வழிய அதை மனைவி துடைக்க நான் சாடையாகச் செரும அத்தோடு முடியும் அது.

கிழவி சொன்னது சரிதான். இனிமேல் சென்ற நாள் செல்லாது. அரியம் சமையப் போகிறாள். அவள் பெரிய மனுஷியாகப் போவதை எண்ணிக் கிழவியும் நாங்களும் ஏன் வருத்தப்பட்டுக் கொள்ளவேண்டுமோ? சந்தோஷப்படவும் முடியவில்லை. சமைந்ததும் அவளை அழைத்துப் போய் விடுவான் சாமித்தம்பி. அவள் போய் விட்டால்… உத்தியோகம்.. குழந்தை.. வீடு..? இன்னொருத்தியைத் தேடி பழையபடியே காவடி…

‘கௌரி… டாட்டா… காட்டுங்க டாட்டா’ குழந்தைக்கு விளங்கி விட்டது? அரியத்தை இறுகப் பற்றுகிறாள்… சிணுங்கல் சிக்கி சிக்கி வெளி வருகிறது.

‘எங்கட பிள்ள நல்ல கௌரிக் குஞ்சு - ராசாத்தி… ஆயோம் போயிற்று வாறன் ஆ.. குளப்படி பண்ணாமல் அச்சாப் பிள்ளையா இருக்க வேணும்… சரியோ.. எங்க பாப்பம்… டாட்டா காட்டுங்க… வணக்கம் காட்டுங்க…?’

‘ஆ… ஆ… போதும் புறப்படு… பொழுது போகுது!’ சாமித்தம்பி அரியத்தை துரிதப்படுத்துகிறான்.

‘அரியம் சட்டையெல்லாம் எடுத்துக் கொள். சம்பளக்காசு பாக்கி கிடையாது! நீ பெரியவளான பிறகு தான் போவாய் என்று நினைச்சம். அதுக்குள்ள உன்ர அக்காட புருஷன் மெக்கானிக்கருக்கு மானம் போகுதாம். அதுக்கென்ன நீ போகத்தானே வேணும். ஆனால் இப்படித் திடுதிப்பென்று உன்ர அப்பன் செய்வான் என்று நாங்கள் நம்பியிருக்கல்ல…. கௌரிக்குத் தான் துணை இல்ல.. அவள் ஏங்கிப் போவாள்… ஆயோம்.. ஆயோம்… என்று உன்னத் தேடுவாள்! சரி சரி நீங்க கௌரியை அரியத்திடம் வாங்கி எடுங்க…?’

இதற்கு மேல் மனைவியால் பேசமுடியவில்லை.. அரியத்தைக் கட்டிக் கட்டிப் பிடிக்கும் கௌரியை வலுவில் பறித்தெடுக்கிறேன். அதைப் பார்த்து அவள் விம்முகிறாள். அதைப் பார்த்த நான்…?

கௌரியைத் தேற்றிக் கொண்டே அறைக்குள் போகிறேன். அறையில் மூசு;சு முட்டுகிறது. சட்டைப் பையுள் நுழைந்த கை வெளியேற விறாந்தைக்கு விரைகிறேன்.

கையில் பார்சலோடு தகப்பன் அருகில் விடை பெறக் காத்து நிற்கிறாள் அரியம். குழந்தை ஆயோம் என்று கூப்பிட்டுக் கொண்டே அவளிடம் தாவத் துடிக்கிறாள். இப்பொழுது அரியம் கௌரியை என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளவில்லை. மனைவியிடம் அவளைக் கொடுத்துவிட்டு…

‘அரியம் இதை வைத்துக் கொள். சந்தோஷமாகப் போய்வா! நீ நல்லபடியாக வாழ வேண்டும். கௌரிக்கும் எங்களுக்கும் நல்ல துணையாக இருந்தாய்….! இனிமேல் கௌரி புதிய துணை தேட வேண்டும்… அவள் ஏங்கிப் போவாளே…!’ மேலும் பேச முடியவில்லை. நிலையில் சாய்ந்த படியே கண்ணீர் பெருக்கும் மனைவி. அவளைப் பார்த்து விம்மும் குழந்தைகள். இடையில் அவர்களுக்கு ஒத்தாக நான்….

அரியத்தின் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. அவள் கண்களிலும் கலக்கம் கிடையாது. அசைவற்று நிச்சலனமாக நின்ற அவள் தாயிடம் இருந்து குழந்தையை அணைத்து கடைசியாகக் கொஞ்சுகிறாள்.

‘கௌரிக் குஞ்சு இஞ்சப் பாருங்க.. வடிவு காட்டுங்க… கவனம்! கோவங் காட்டுங்க.. அச்சாப்பிள்ள! டாட்டா.. வணக்கம்..! ஆயத்துக்கு டாட்டா காட்டுங்க… காட்ட மாட்டீங்களா…?’

…………………………………………………………..
திமிறி அழும் கௌரியை மார்போடு அணைத்தபடி விக்கி விக்கி அழுகிறாள் மனைவி.

சாமித்தம்பி வாசலில் இறங்கி நடக்கிறான்.

‘கௌரி டாட்டா… டாட்டா…’ சிரித்தபடியே கைகளை அசைத்து அரியம் கௌரியிடம் விடை பெற்றுக் கொள்கிறாள்!

‘ஐயா.. போயித்து வாறன் ஆ…’

‘நளினி.. வினு… ஊஜ்ஜி… எல்லாருக்கும் போயித்து வாறன்…ஆ…’

ஒரு ஞானியைப் போல எவ்வித நெஞ்ச நெகிழ்வும் இல்லாமல் அரியம் எங்களிடம் விடை பெறுகிறாள். வாங்கிய பணத்துக்கு அவள் கடமை முடிகிறது. பணத்திற்காகத்தான் அவள் எங்களோடு ஒட்டி இருந்தாளா? அதற்கு மேல்….. அந்தப் பணத்திற்கு மேல் இந்த உலகில் வேறு ஒன்றுமே இல்லையா?

தனது பிஞ்சுக் கரங்களை அசைத்து அசைத்து ‘ஆயோம்… ஆயோம்’ என்று கௌரி அரியத்தைக் கூப்பிடுகிறாள். திரும்பிப் பார்த்து கைகளை ஆட்டிச் சிரித்தபடியே தெருவில் இறங்கிய அரியம் - அந்த இளவரசி தன் ஊரை நோக்கி - தனது விதியை நிச்சயித்தவளாக, உறுதியாக நடந்து அவள் அப்பனைப் பின் தொடர்கிறாள்.

அரியம். அவள் போகவேண்டியவள்தான் என்பதை இன்னும் சில நாட்களில் கௌரியும் தெரிந்துகொள்வாள். அதுவரை..?

Tuesday, August 12

வெள்ளையா நான் வளர்த்த வீரா..!

வெள்ளையா நான் வளர்த்த வீரா....
எனதன்பின்
பிள்ளையே, இன்று
பிரிந்தாய் எனைவிட்டு!
நல்ல சுகமாய் நடந்தாய்...
பகல் வாசல்
மல்லிகையின் கீழே
மடுக்கிண்டிக் கொண்டதற்குள்
காலை மடக்கி,
கவட்டுக்குள் உன்னுடைய
வாலைச் சுருட்டி
வடிவாய்ப் படுத்திருந்தாய்!
வாசல்கிண்டும் உன்றன்
வழக்கம் பிழையென்று
ஏசியுள்ளேன் எத்தனைநாள்...
என்றாலும் மன்னிப்பாய்!
கோடிப் புறத்தில் குரக்கன் பயிருக்குள்
ஓடிப் புரண்டாய்...
ஒருவாய் அதில் கடித்தாய்...
பார்த்துநின்ற என் இளைய
பையன் உனை மரணம்
பூர்த்த விதத்தை
புகன்ற விதம் என்நெஞ்சை
பேர்த்தெறியச்
சோற்றைப் பிடித்த படி
வேர்த்தேன்... வெயிலுக்குள்
வெள்ளையன் நீ மல்லாந்து
சாய்ந்து கிடந்தாய்!
சலனம் இலைச் சவம்நீ!

ஆய்ந்தால்... நினது
அரிய குணங்களெலாம்
தோன்றி, மனது
துடிக்குதடா வெள்ளையா!

நீண்டு தொங்கும் உன்றன்
நெடிய செவியழகும்
கொட்டன்வால் வெண்பஞ்சின்
குப்பை மயிரழகும்
கட்டையாய் வாய்ந்துவிட்ட
கால் நான்கும்... எல்லாம்
பயனற்று போய்க் கிடத்தல்
பார்த்தேன் நான் பார்த்தேன்
பயணம் போய் விட்டாய்...
பகலுணவு பண்ணுமுன்பே!
காத்திருந்து வந்த
கவிதை சுரப்பெடுக்க
வார்த்தைகளில் தோய்ந்து
வசப்பட்டு நிற்கையிலே
உப்புப் புளி அரிசி
ஊர்க்கருமம் காரியங்கள்
செப்பிச் சினந்தெனது
சிந்தனையைத் துண்டாடும்!

அற்ப செயல்கள்
அறியாய் ஒருநாளும்...!
நெற்பயிரை மாடு
வயிறு நிறைக்கையிலும்
பூக்கன்றை நக்கும் பொழுதும்...
துரத்தாது
தூக்கத்தில் மண்ணுக்குள்
தோண்டிப் படுத்திருப்பாய்!
அப்பொழுதுன் மேல் எனக்கு
ஆத்திரமாய் வந்ததுண்மை
துப்பாக்கி தூக்கித்
துரத்தியதும் உண்மைதான்!
வீட்டுக்குக்கு காவல் இருப்பவன் நீ...
அங்குவரும்
மாட்டை துரத்தி
மறித்தல் கடனென்றும்
ஊட்டுதற்கே அப்படியும்
உன்னைப் பயமுறுத்திக்
காட்டினேன் உன்மேல்
கருணையின்றிச் செய்யவில்லை

நாய்க்குலத்தில் நீபிறந்தாய்...
நல்லதம்பி உன்னவர் பெண்
நாய்க்குப் பின் னோடி
நடுத்தெருவில் நின்றுகொண்டு
ஆளையாள் காமக்
குரோதத்தால் கொல்வதற்காய்
வாலை, முகத்தை,
வயிற்றைக் கடிப்பது போல்
வெள்ளையா நீ எதுவும்
வெட்கமுள்ள காரியங்கள்
உள்ளி அறியாய் நீ
உத்தமனே! பக்கத்து
வீட்டில் கிடக்கின்ற
வீரனோடு வெண்ணிலவுக்
காட்டில் பிடித்துக்
கடித்து வளவெங்கும்
ஓடிப் பிடித்து ஒளித்துவிளை யாடுவதும்
வேடிக்கை பார்த்த விநோதன்
தடியெடுத்துப்
போட்டால் முதுகில்,
புறவளவில் போய்ப் படுத்து
வீட்டுக்குப் பின்சுற்றி
வேலிக்குள் ளால் நுழைந்து
வாலாட்டிக் கொண்டே
வருவாய் வழக்கம் போல்!

காலெல்லாம் வெள்ளைமயிர்க்
காடு சொறிவந்து
பின்கால் சதை தெரியப்
பெற்றாய்; தக்காளியைப் போல்!
கண்டோர் அருவருத்தார்....
காணத் தகாததிதைக்
கொன்று விடும்படியும்
கூறினார் சிற்சிலபேர்
என்றதற்காய்... உன்னை யான்
ஏசித் துரத்தவிலை
தேங்காயை நீ திருடித் தின்றதுவாய்...
என்மனைவி
"ஏன்கொணர்ந்தீர் இச்சனியை"
என்று முறைப் பாடுசொல்லும்
போதில் உனைநான்
புறுபுறுத்த தெல்லாம் பொய்!

ஏது நடந்து இறந்தாய் என அறியேன்!
கோடிப்புறத்தில் மடுவெட்டி கொண்டுன்னை
சோடினைகள் மேளம்...
வரிசையெதும் இன்றியே
மண்போடும் போதில்
மனது கனப்பெடுத்த
கண்ணீரே இந்தக் கவி.

வெளுத்துக் கட்டு

கேளப்பா ஊர்ப்போடி, உலக நாதா
கிட்டவந்து நான் கூறும் ரகசியத்தை
ஆளப்பா ஊரை அழகாக உன்னை
ஆரப்பா அதிகாரம் செய்தல் கூடும்!
ஏழைபர தேசி, உள்ள எழிய சாதி
எல்லோரும் உமக்கு மரியாதை செய்வார்!
தாளக்கட் டாட்டங்கள் போட்டு, நல்ல
தமிழ் பேசத் தெரிந்தவன் நீ! தலை சாயாதே!

"எங்கையடா வண்ணானைக் காணவில்லை?"
என்றே நீர் இரைகின்ற வார்த்தை கேட்டால்
சங்கை செய்வான் கம்மாஞ்சி சால்வை தூக்கி
"சவமெடுக்க வேணு"மென்பாய்! "போடியாரே
எங்கடனைத் தாரு"மென்பான் வண்ணான் நின்று
"எதிர்த்தோடா பேசுகிறாய் கையை நீட்டி
உங்கள் ஊர் இல்லையிது கவனம்" என்பாய்!
"ஓம்" என்று வணங்கிடுவான் வண்ணான் சென்று!

அம்பட்டன், கடமைகளைச் செய்ய, ஏதும்
அசமந்தம் நேர்ந்தாலும் - அலறித் துள்ளி
"அம்பட்ட பயலே உன் அலுவல் என்ன?
அடித்தேனோ பல்லுடையும்" என்பாய் நீயோ!
தம்பட்டம் கொட்டுபவன் தரித்தால் என்ன,
"தடிப்பயலே பறைப்பயலே தவிலைத் தட்டு
தும்புக்கட் டடிதருவேன்" என்பாய், கேட்டு
துடிதுடித்தே பறையடிப்பான் தொம்தொம் தொம்தொம்!

சாவீடு கலியாண வீடு கோயில்
சபை சந்தி, நீ அல்லால் சரிப்படாதே!
காவோடு போகின்ற கடையன் கூடக்
கண்டுன்னை அஞ்சுகின்றான் என்றால், உன்றன்
நாவோடு குடியிருக்கும் நளின வார்த்தை
நாலைந்தே காரணமாம்! நன்றே, நெஞ்சில்
நோவோடு பறைவண்ணான், போனால் உன்னை
நொட்டிவிட முடியாதோ! போடி யாரே!

கன்னத்துக் கொண்டையினை வெட்டினாலும்
கடுக்கனையும் காதைவிட்டுக் கழற்றினாலும்
இன்னும் இவை போன்ற சில பழைய கொள்கை
எவைஎவையோ ஒழித்தாலும், நமது சாதி
முன்னாளில் கடைப்பிடித்த கொள்கை யாவும்
முழுதாக அழியாமல் காத்து நிற்கும்
என்னருமை ஊர்ப்போடி யாரே, உம்மை
எதிர்காலம்! பகைதீர்க்க எழுந்த தப்பா!

உழைப்பவர்தம் உலகமிது போடியாரே
உம்போல உட்கார்ந்து ஊரை மேய்க்கும்
பிழைப்புடையார் பெரியாராய் வாழ நாங்கள்
பேசுதற்கும் உரிமையற்ற புழுக்கையாமோ
புழுக்களல்லர்! தொழிலாளர்! கவனம்... நாளை
புரட்சித்தீ! உம்வாயைப் பொசுக்கித்தின்னும்
இழக்காரம் பேசாதே எதிர்காலத்தை
எதிர்க்க உம்மால் இயலாதே! என்பான் போல!

ஊதுகிறான் பறைகுழலை அதனை! ஓம் ஓம்!
உண்மையெனத் தவிலடிப்பான் ஒருவன்! சாவில்
வாது செய்த வண்ணானோ கல்லில்... மோதி
வஞ்சினத்தைத் தீர்க்க அதோ பயிற்சி செய்வான்!
ஆதலினால் ஊர்ப்போடி! உலக நாதா
அவமானம் ஏதேனும் ஒருநாள் நேரும்
வேதனையும் சோதனையும் விளையக் கூடும்
விடாதேயுன், வீரத்தை வெளுத்துக் கட்டு!

பாடும் மீன் 2ம் இதழ்

பிழையாய் நினையாதீர்

என்னைப் பிழையாய் நினையாதீர்
~எதனால்? என்பீர்,
அவசரமாய்
என்னைப்பற்றி, நானேயாய்
எடுத்துக்கூறல்... அதையுன்னி
என்னைப் பிழையாய் நினையாதீர்!

பொன்னைப்
புகழைப் பெரும்பொய்யைப்
பூவைப் பெண்ணைப் புதுநிலவைப்
பண்ணிப் படைத்து விட்டிருந்தால்....
பாவம் இவையே போதாவோ?
~உண்மை| எனவும் ஒன்றிங்கே
உலவும்!
அதனால்... அடியார்காள்!
என்னைப் பிழையாய் நினையாதீர்

- 20.3.64

Friday, August 1

பிறப்பு

பச்சைப் பசுந்தமிழில் பாடுவதும்
நம்குழவி
கொச்சை மழலை குழைவதினும்
பிச்சையிட்டு
ஆண்டான் அடிமையினை
அட்டியின்றித் திட்டுதலும்
வேண்டும்!
தமிழாயின் வேண்டுமடா!
கூண்டினிலே
பொல்லாச் சிறுத்தை
பொறைஇழந்து சீறிடவும் இல்லை;
அதற்கிவ்
இனியகுரல் இல்லை இல்லை!
ஆரோ ஒரு பெண்!
அவளுக்கிந் நேரத்தே
நேராக் குறையென்ன நேர்ந்ததுவோ?
போராட்டம்
தான்! எனினும் அன்னாள்
தமிழில் அழுகின்றாள்!
ஏன் என் றறிதல் இழுக்கல்ல
என் மான்பிணித்த
கையை விலக்கி
இரு காதுகளைத் தீட்டிவிட்டுப்
பைய எழுந்து
பலகணியின் மெய்தழுவி
நின்றேன்; அதுபொழுது
நீல நெடுவானில்
நின்ற இளநிலவும்
நீந்தியெங்கோ சென்றிருந்தான்
தோய்ந்த இருளின்
தொலைவில் நடப்பதனை
ஆய்ந்தறியக் கண்களினால்
ஆகவிலைத்
தேய்ந்த ஒலி
விக்கல், முனகல்,
விதியென்ற கூப்பாடெத்
“திக்” கென்ன யானும்
திரும்பிடவும் பக்கத்தே
பல்லென்று வெண்சம்பாப்
பாற்சோ(று) அடுக்கியவள்
சொல்கிறாள்; தாய்மை சுரப்பெடுக்க!
“வல், விரைவில்
பெண்மைச் சிகரத்தின் பேறாக
ஓர் அழகின் கண்மணியைச், செய்ய
கதிர்மகனைத் தன்மடியில்
தாங்கக் கடல் அன்னை
தன்னை மறந்தங்கு
ஏங்குவதும் உங்கட் கினிப்பாமோ?
நாங்களுண்டு!
அப்பால் நகர்ந்திடுக ஆண்குலமே!
நும்செயலே
இப்பாவை சோகம்!
இனிமேலும் எப்படியும்
வாழ்க உமக்கிங்கு
வாய்ந்த நலம் யாவும்!
கீழ் வானில் மேகக்
கிழியலினுள்
தாழ்வில் பவள மணியென்னப்
பாலன் ஒருவன்
அவதரிக்கப் போகின்றான்
ஆமாம்!அவதிகண்டு
வாயின் கழிவிரக்க
வாந்தியினால் தாயடைந்த
நோயின் கொடுமை
நொடித்திடுமோ? போயிடுக!
கண்டால் உமைத்தாய்மை
கண்ணீர் பெருக்கிடுவாள்!
கொண்டாட வாம்
அக் குழவிவந்த பின்பாடு”
என்றென்னை எள்ளி
இதழ்க்கடையிற் பூத்த நகை
கொன்றாள்!முகமதியம்
குங்குமமாய்த் தின்றதெனை
அக்கணத்தே கொம்பிருந்த
ஆண்கோழி ஒன்றெழுந்து
“கொக்கரக்கோ” என்றேதோ
கூவிற்றே
செக்கர்வான்கம்பளத்துட்
பிள்ளைக் கனியமுதம் சிந்திற்றே!
நம்பினால் நம்புங்கள்
நம்மூரின் கம்பனுக்கும்
ஆகாதே அந்த
அழகை வியந்துரைக்க!
பாகாய் உருகிற்றென் பாவுள்ளம்
ஆஹா - ஹா!
விண்ணோடு மன் ஆன
விரிகதிரை ஈன்ற
பெண்ணால் உலகெய்தும் பேறு!